தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்துக்கொல்லப்பட்ட மருத்துவர் பிரியங்கா கொலையில் குற்றவாளிகள் அதே இடத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட செய்தி பரவலாக பாராட்டைப் பெற்றுவருகிறது.

நிதானமான சிந்தனைகள் வருவதற்கு முன் நமக்கும் இது ஒருவிதமான ஆறுதலையும் பழிவாங்கிய உணர்வையும் ஏற்படுத்துகிறது.
‘என் மகளின் ஆன்மா சாந்தி அடையும் ‘என்று மகளை பறிகொடுத்த தந்தை கூறுவதை அதே உணர்வுடன் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இது சரியான முறையான தீர்வு அல்ல. ஏனெனில்

1. இந்த மாதிரியான குற்றங்களில் குற்றவாளிகளின் பின்னணியைப் பொறுத்துதான் என்கவுண்டர்கள் நடக்கின்றன.
2. கைது செய்யப்பட்டவர்கள் இப்படி கொல்லப்படும்போது உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தானா ? அல்லது இவர்கள் மட்டும்தானா ? என்ற உண்மைகள் வெளிவருவதில்லை.
3. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்கவுண்டர்களால் தீர்க்கப்பட முடியாதது.

இதேபோல உத்தரப் பிரதேசத்தில் உனாவ் மாவட்டத்தில் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்து வழக்குநடத்திக் கொண்டிருந்தார் . அப்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்டார் . இன்னொரு பெண் வழக்கு நடத்துவதற்காக நீதிமன்றம் செல்லும் வழியில் வழிமறித்து எரிக்கப்பட்டுள்ளார். 90 சதவீத தீக்காயங்களோடு அவர் இப்போது டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் மட்டுமா
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூட யாரும் என்கவுண்டர் செய்யப்படவில்லை.

எனவே இந்தக் கொடுமைகளுக்குத் தீர்வு சட்டத்தை சரியாக , விரைவாக , சமமாக ,முறையாக , குறித்த கால வரையறைக்குள் முடிக்க வேண்டும் . அதிகபட்ச தண்டனையை ஒரேமாதிரி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதுதான்.

அதைவிட முக்கியமானது அவன் ஆம்பளைங்க .. அவன் அப்படித்தான் இருப்பான் என்று பேசுகிற மூளைகளுக்கு முதலில் மருத்துவம் செய்ய வேண்டும் .

 244 total views