வேலூர்,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் முருகன் அறையில் செல்போன் கைப்பற்றப்பட்டதை அடுத்து அவருக்கு வழங்கப்பட்ட அனைத்து சிறை சலுகைகளும் ரத்துசெய்யப்பட்டன. அதன்படி முருகன் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.

இதனை கண்டித்து முருகன் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி நளினியும் நேற்று 8-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் அவர்களின் வக்கீல் புகழேந்தி நேற்று முருகனையும், நளினியையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முருகன் தன்னை தனி அறையில் இருந்து மாற்றக்கோரி 16-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) மயக்கம்போட்டு விழுந்ததாகவும், இன்று (நேற்று) காலை வந்த மருத்துவர்கள் பரிசோதனை செய்யாமல் சென்று விட்டதாகவும் அவர் தெரிவித்தார். செல்போன் கைப்பற்றப்பட்டதாக தன் மீது போடப்பட்ட பொய் வழக்கை நானே கோர்ட்டில் நேரடியாக ஆஜராகி வாதாடி குற்றமற்றவன் என நிரூபிப்பேன் என்று முருகன் என்னிடம் தெரிவித்தார்.

659 total views, 3 views today