தேவையான பொருட்கள்
1 படி உரித்த நாட்டு சின்ன வெங்காயம்
15 காரமான பச்சை மிளகாய்
10 மிளகாய் வற்றல்
1½ டம்ளர் படி உளுந்தம் பருப்பு
½ டம்ளர் படி உப்பு
ஒரு கை பிடி அளவு கடுகு, சீரகம் (கைபிடி என்பது மூடிய கைக்குள் அடங்கும் அளவு)
சிறிது பெருங்காயம்

செய்முறை

1.முதலில் செய்ய வேண்டியது மாவு
உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், உப்பு பெருங்காயம் இந்த நான்கையும் நன்றாக கெட்டியாக(ரொம்ப முக்கியம்.
இல்லை என்றால் வெங்காயம் சேர்த்ததும் நீர் விட்டு எல்லாமே கெட்டு விடும்) அரைத்துக்கொள்ளவும்.

2.பிறகு வெங்காயத்தை எவ்வளவு பொடியாக நறுக்க முடியுமோ அவ்வளவு பொடியாக நறுக்கவும்.

3.அருவா மனை தான் சிறந்த சாதனம். குறுக்கு வழி தேடினால் சுவைக்காது. பச்சை மிளகாய் கறிவேப்பிலையும் பொடியாக நறுக்கி கொள்ளவும்.

இனி வடாம் செய்யும் முறை

4.கெட்டியாக அரைத்து வைத்த மாவில் எல்லா பொருளையும் சேர்த்து சிறு சிறு தட்டையாக தட்டி காட்டன் வேட்டியில் வைத்து அதை அப்படியே வெயிலில் காய வைக்கவும்.

5 90% காய்ந்ததும் நிழலில் வைத்து மீதியை காய வைக்கவும். நன்கு காய்ந்ததும் ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து பாதுகாத்து கொள்ளவும்.

இனி வறுக்கும் முறை.

6.முதலில் அலுமினிய சட்டியில் எண்ணை விட்டு (தட்டையான வடகம் மூழ்கும் வரை) நன்றாக காய வைக்கவும்.

7.பிறகு தீயை குறைத்து விடவும். இப்பொழுது வடகம் 3-4 பொட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். சுவையான வெங்காய வடகம் தயார்.

பின் குறிப்பு
டம்ளர் படி என்பது கால் படியில் நான்கில் ஒரு பகுதி. ஒரு படி என்பது 1½ லிட்டர். கூட்டி கழித்து பாருங்க கணக்கு சரியா வரும்

1,386 total views, 2 views today