புதுவை மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான புருஷோத்தமன் விஷ வண்டு கடித்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் பதவி வகித்து வந்தவர் முன்னாள் எம்எல்ஏ புருஷோத்தமன். மணவெளியில் வசித்து வந்த இவர், புதுச்சேரி – தமிழக எல்லையான ராதாபுரத்தில் உள்ள தனது விவசாய நிலத்தை பார்வையிட சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.

அப்போது வயல் வெளியில் சுற்றித்திரிந்த விஷத்தன்மையுள்ள கடந்தை வண்டு புருசோத்தமனை கொட்டியதால் அவர் சிறிது நேரத்தில் மயக்கமடைந்ததாக கூறப்படுகின்றது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை சிகிச்சைகாக விக்கிரவாண்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

புருஷோத்தமனுக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன், 5 மகள்களும் உள்ளனர். புருஷோத்தமன் 2014-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளராக பொறுப்பு வகித்தார்.

அரியாங்குப்பம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாகவும் பொறுப்பு வகித்துள்ளார். புருஷோத்தமன், மறைந்த விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணியின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடதக்கது. புதுச்சேரி மணவெளியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு இன்று இறுதி சடங்கு நடக்க இருக்கிறது.

550 total views, 3 views today