நிலவில் விழுந்து நொறுங்கிச் சிதறிய சந்திரயான் இரண்டின் விக்ரம் லேண்டர் பாகங்களை, நாசா எடுத்த புகைப்படங்கள் மூலமாக தமிழகத்தை சேர்ந்த என்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது. லேண்டர் எங்கு விழுந்தது, லேண்டரின் தற்போதைய நிலை என்ன என்பதை அறிய இஸ்ரோ தீவிர முயற்சி மேற்கொண்டது.

சந்திரயான் 2 மூலமாக சென்ற ஆர்பிட்டரில் உள்ள கேமரா மூலம் லேண்டரை கண்டுபிடிக்க மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. இதனை தொடர்ந்து நாசாவும் கடந்த 2009ம் ஆண்டு முதல் நிலவை சுற்றி வரும் தனது ஆர்பிட்டர் மூலமாக விக்ரம் லேண்டரின் இருப்பிடித்தை அறிய முயன்றது. ஆனால் விக்ரம் லேண்டரின் நிலையை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

இந்த நிலையில் நிலவில் விக்ரம் லேண்டர் விழுந்த இடம் மற்றும் அதன் சிதறிய பாகங்களை தங்களது ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. மேலும், புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள நாசா, அதில் புளோரசன்ட் பச்சை நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி, விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்கள் என்றும், வெளிர் நீல நிற பகுதிகள், லேண்டர் விழுந்ததால் நிலவின் மண்ணில் ஏற்பட்ட மாற்றங்கள் என்றும் தெரிவித்துள்ளது.

இதனிடையே மதுரையை சேர்ந்த பொறியாளரான சண்முக சுப்ரமணியன் நாசா எடுத்த புகைப்படங்கள் மூலமாக விக்ரம் லேண்டரின் பாகங்கள் மற்றும் அது விழுந்த இடங்களை தான் தான் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளார்.

விக்ரம் லேண்டர் நிலவில் விழுவதற்கு முன்னதாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கடந்த செப்டம்பர் 17, அக்டோபர் 14, மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில், அதே இடத்தில் அமெரிக்காவின் ஆர்பிட்டர் எடுத்த புகைப்படங்கள் போன்றவற்றை ஆய்வு செய்து விக்ரம் லேண்டர் விழுந்த இடம் மற்றும் அதன் சிதறிய பாகங்களை கண்டுபிடித்துள்ளதாக சண்முக சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் தனது கண்டுபிடிப்புகளை நாசாவிற்கு அனுப்பியதாக கூறியுள்ள அவர், அதனை ஆய்வு செய்து தாம் கண்டுபிடித்தது தான் விக்ரம் லேண்டரின் பாகங்கள் என்று அங்கீகரித்து நாசா மின்னஞ்சல் அனுப்பியுள்ளதையும் சண்முக சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார்.

ராக்கெட் விண்ணில் ஏவப்படுவது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்றும், சிறு வயது முதலே ராக்கெட் தொடர்புடைய செய்திகளை ஆர்வத்துடன் அறிந்து வருவதாக சண்முக சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நாசாவால் கூட விக்ரம் லேண்டரை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற ஆர்வத்தில், தான் மேற்கொண்ட ஆய்வின் பலனாக இதை சாதித்திருப்பதாகவும் சண்முக சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மதுரையை பூர்வீகமாக கொண்ட சண்முக சுப்ரமணியன் சென்னை தரமணியில் உள்ள லினக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 182 total views,  2 views today