வயதானவர்களை மட்டும் தாக்கும் நோயாகக் கருதப்படுகிற எலும்பு புரை நோய் தமிழ்நாட்டில் இளவயதினர் மத்தியிலும் அதிகரித்து வருகிறது

மதுரை, அக் 17: வயதானவர்கள் மத்தியில் திறனிழப்பு மற்றும் நோய் பாதிப்புக்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கும் எலும்பு புரை நோயானது தமிழ்நாட்டில் 40 வயதுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் இளவயதினரிடம் அதிகரித்துவருகிறது. இந்நோய் அதிகரித்துவருவதற்கானj முக்கிய காரணங்களாக, உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை, உடலில் வைட்டமின் D மற்றும் கால்சியம் குறைபாடு, சமச்சீரற்ற உணவுமுறை மற்றும் உடலுக்கு தேவையான சூரிய வெளிச்சம் கிடைக்காமல் போதல் ஆகியவை கருதப்படுகிறது. மதுரையிலுள்ள மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (MMHRC) மூட்டு பாதுகாப்பு மற்றும் விளையாட்டு காய சிகிச்சை மையத்தின் துறை தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர். UT வாசன் மேற்கண்டவாறு தனது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ம் தேதி அனுசரிக்கப்படுகிற உலக எலும்பு புரை தினத்திற்கான முன்னோட்ட நிகழ்வில் பேசிய டாக்டர். UT வாசன், எலும்புகளின் அடர்த்தியைக் குறைத்து அவைகளை துளைகள் உள்ளதாகவும், எளிதில் முறிவடையக்கூடியதாகவும் மாறுவதே எலும்பு புரை நோய் என்று விளக்கமளித்தார். இதன் காரணமாக, எலும்பு முறிவுகள் அடிக்கடி ஏற்படுவது நோய் பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எலும்பு புரை நோயானது பெரிய அறிகுறிகலின்றி வளர்ச்சியடைக்கூடியதாகும். முதல் எலும்பு முறிவு ஏற்படும் வரை பொதுவாக இதன் அறிகுறிகள் வெளியே தெரிவதில்லை.

வயதானவர்கள் மத்தியில் குறிப்பாக 50 வயதுக்கு அதிகமான பெண்கள் மத்தியில் எலும்பு புரை நோய் பொதுவாக காணப்படுகிறது. அத்துடன், ஆஸ்துமா மற்றும் வீக்கமுள்ள கீல்வாதம் போன்றh நாட்பட்ட நோய்களால் அவதியுறுகிற நபர்களையும் இது அதிகமாக பாதிக்கிறது. சமீபத்தில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி, 50 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட வயது பிரிவிலுள்ள, நகர்ப்புறத்தில் வசிக்கிற பெண்களில் 40%மும், ஆண்களில் 20%-க்கும் அதிகமானவர்களும் எலும்பு புரை மற்றும் எலும்பு அரிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதே விழுக்காட்டு அளவிலான ஆண்களும், பெண்களும் கிராமப்புற பகுதிகளிலும் இந்நோய் பாதிப்பைக் கொண்டிருப்பதற்கான சாத்தியம் இருக்கிறது. ஏனெனில், நகரங்களுக்கு வெளியே கிராமங்களில் வசிக்கிற மக்களும்கூட நகர்ப்புறம் சார்ந்த வாழ்க்கை முறையை இப்போது பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

இந்த மோசமான நோய் தாக்குவதற்கு முன்னதாக வராமல் முன்தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது மிக முக்கியமாகும். தவறாமல் உடற்பயிற்சி, யோகா, மதுவின் அளவை குறைப்பது அல்லது முற்றிலுமாக தவிர்ப்பது, புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது, கால்சியம் செறிவான உணவுகள், குறைவான கொழுப்பு அடங்கிய பால் பொருட்கள் மற்றும் கீரை வகைகள் போன்றவற்றை உட்கொள்வதும் மற்றும் போதுமான சூரிய வெளிச்சத்திற்கு உடலை உட்படுத்துவதும் எலும்பு புரை நோய் வராமல் முன்தடுப்பதில் பெரிதும் உதவக்கூடும்,’ என்று டாக்டர். UT வாசன் கூறினார்.

இவர்களுடன் மூட்டு பாதுகாப்பு மற்றும் விளையாட்டு காய சிகிச்சை மையத்தின் நிபுணரான டாக்டர் பிரபு வைரவன் மற்றும் மருத்துவமனையின் மருத்துவ நிர்வாகி டாக்டர் கண்ணன் கலந்து கொண்டனர்

180 total views, 3 views today