தமிழக முதல்-அமைச்சராக ஜெயலலிதா 1991-1996-ம் ஆண்டுகளில் பதவி வகித்தார்.

1992-ம் ஆண்டு அவர் தன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினார்.

அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான பரிசுகளைபொருட்களாகவும், ரொக்கமாகவும் வழங்கினார்கள்.

அப்போது, ரூ.2 கோடி 9 லட்சத்து 50 ஆயிரம் அவருக்கு கேட்பு காசோலை மூலமாக பரிசாக வழங்கப்பட்டது.

முதல்அமைச்சராக பதவி வகிக்கும் நபர், தனக்கு பரிசாக கொடுக்கப்படும் பெரும் தொகையை அரசு கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், ஜெயலலிதா அந்த தொகையை தன்னுடைய சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தி எடுத்துக் கொண்டார்.

இது குறித்து 1996-ம்ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை நீண்ட காலமாக சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்யவில்லை.

இதனால், சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் இருந்து வந்தது.

10 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந்தேதி இந்த வழக்கின்குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்தனர்.

அதில், ஜெயலலிதா, அழகு திருநாவுகரசு, செங்கோட்டையன் ஆகியோர் மீதுகுற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜெயலலிதா உட்பட 3 பேரும் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்குப்பதிவு செய்து 10 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சட்டப்படி தவறாகும் என்று கூறி, இதற்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகளையும் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி கே.என்.பாஷா, கடந்த 2011-ம் ஆண்டு தீர்ப்புவழங்கினார். அதில், ‘பிறந்த நாள் பரிசு பொருள் வழக்கை முதலில் தமிழக சி.பி.சி.ஐ.டி.போலீசார் 1996-ம் ஆண்டு ஜூன் 24-ந்தேதி பதிவு செய்துள்ளனர்.

பின்னர் இந்த வழக்கு அதே ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி சி.பி.ஐ. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஆனால், சி.பி.ஐ. போலீசார் இந்த வழக்கை உடனடியாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், 10 ஆண்டுகளுக்கு பின்னர் 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் தான் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

அதுவும் இந்த காலதாமதத்துக்கு என்ன காரணம்? என்று சி.பி.ஐ. தரப்பில் விளக்கம் அளிக்கவில்லை. எனவே, ஜெயலலிதா உட்பட 3 பேருக்கு எதிராக சி.பி.ஐ. தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்கிறேன்’ என்று நீதிபதி கே.என்.பாஷா தன் தீர்ப்பில் கூறியிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் பினாங்கி சந்திரகோஷ், ரோகின்டன் நாரிமன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஜெயலலிதா, அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இறந்து விட்டதால்,அவர்களது பெயரை இந்த வழக்கில் இருந்து நீக்கி விடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

செங்கோட்டையன் மீதான வழக்கை வருகிற கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

 681 total views