கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கித்தவித்த 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தேக்கம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையம் அருகாமையில் உள்ள பவானி ஆற்றின் நடுவே சுமார் 51 பேர் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் நடுவே இருந்த அனைவரும் உடனடியாக மேடான பகுதிக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த மேடான பகுதிக்கு இருப்புறத்திலும் வெள்ளம் கரைப்புரண்டு ஓடியது.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் இறங்கினர். பரிசல் இயக்குபவர்களின் உதவியுடன் முதலில் குழந்தைகள் பெண்கள் என சுமார் 34 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன் பிறகு எஞ்சியவர்கள் மீட்கப்பட்டனர்.

இரவு ஆனதாலும் ஆற்றில் ஆர்ப்பரித்த வெள்ளப்பெருக்காலும் மீட்பு பணிகளில் சற்று தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் மூன்று மணி நேரமாக நடந்த மீட்புப் பணிகளில் 51 பேரும் மீட்கப்பட்டனர்.

340 total views, 3 views today