மகாராஷ்ட்ரா பதவி ஏற்பு விழா… மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு…!

0
0

மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக நாளை நடைபெறும் பிரமாண்ட விழாவில் உத்தவ் தாக்கரே பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ரா மாநில சட்டப்பேரவையின் கூட்டம் காலை 8 மணிக்கு தொடங்கியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்கியது. எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் காளிதாஸ் கோலம்ப்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பிருத்விராஜ் சவுகான் உள்ளிட்டோர் எம்எல்ஏக்களாக பதவியேற்றனர். தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்த நிலையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்றுள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று பா.ஜ.கவுக்கு ஆதரவு கொடுத்த அஜித் பவார் பதவி ஏற்க வந்த போது சபையில் பெருத்த ஆரவாரம் ஏற்பட்டது. முன்னதாக பதவி ஏற்க அவர் வந்த போது, சரத் பவாரின் மகள் சுப்ரியா, தனது அண்ணனான அஜித் பவாரை கட்டி அணைத்து வரவேற்றார்.

இந்நிலையில் புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஆளுநரின் அழைப்பில் பேரில் மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே நாளை பதவி ஏற்க உள்ளார். இதற்கான விழா மும்பையில் உள்ள சிவாஜிபார்க் மைதானத்தில் நாளை மாலை நடைபெறுகிறது. அந்த விழாவில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே,

பொது மக்கள் இந்த அரசாங்கத்தை தங்கள் சொந்த அரசாங்கமாக நினைக்க வேண்டும் என்றார். ந பதவி ஏற்ற பிறகு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அவர் கூறினார். உத்தவ் தாக்கரே பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையில் மராட்டியத்தில் புதிய அரசு அமைவது உறுதியாகி இருப்பது சிவசேனா தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழா நடைபெறும் சிவாஜி பார்க் மைதானத்தில் தான் சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் சமாதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மராட்டிய மாநிலத்தின் 19ஆவது முதலமைச்சராக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே நாளை பதவியேற்கும் விழாவிற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, மகாராஷ்டிரா வளர்ச்சி முன்னணி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வேளாண் பெருங்குடி மக்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து, சுமார் 400 விவசாயிகளையும், தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்தினரையும், பதவியேற்பு விழாவில், பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

138 total views, 3 views today