பெட்ரோல், டீசல் தினமும் விலை மாற்றும் முறை நாளை முதல் அமல் – பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

June 15, 2017 0 By Novian Aslam

புதுடெல்லி :

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் தினமும் மாறுதல் கொண்டுவரும் நடவடிக்கை நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதன்மூலம், தினமும் ஒரு விலையை வாடிக்கையாளர்கள் சந்திக்க உள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்ள பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதன்படி மாதம் தோறும் 1 மற்றும் 16 தேதிகளில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது.
பெட்ரோல் விலை நிர்ணயிப்பதில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் முக்கிய பங்கு வகித்தது.

ரூபாய் மதிப்பில் தினந்தோறும் மாற்றம் ஏற்படும். அதே போல கச்சா எண்ணெயின் மதிப்பும் நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்தால் வாடிக்கையாளர்களுக்கும், பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் நன்மை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கருதின. தினந்தோறும் விலையை மாற்ற மத்திய அரசிடம் அனுமதி கோரின. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்தது.

கடந்த மாதம் சோதனை முயற்சியாக ஒரு சில நகரங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு வெற்றி கிடைத்ததை தொடர்ந்து நாடு முழுவதும் நாளை முதல் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படும் என சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பெட்டோல் பங்க் டீலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுடன் நேற்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எட்டப்பட்டது. இதை தொடர்ந்து நாளை முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. தினசரி காலை 6 மணிக்கு புதிய விலை விவரங்கள் பெட்ரோல் பங்க்குக்கு அனுப்பி வைக்கப்படும்.

221 total views, 3 views today