இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பட்டப்பகலில் பணத்துடன் வாலிபரை காரில் கடத்திச் சென்று ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்து சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.
இராமநாதபுரம் பசும்பொன் நகரை சேர்ந்த அழகுமலை என்பவருடைய மகன் மங்களநாதன்(38). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வந்து வேலை தேடிவந்துள்ளார். இந்த நிலையில் மங்களநாதன் தான் வைத்திருந்த சுமோ காரை விற்பனை செய்து ரூ.3 லட்சத்து 30 ஆயிரமும், சரக்கு வாகனத்தை அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், பரமக்குடியில் நிதி நிறுவனத்தில் கடனாக ரூ.70 ஆயிரமுமு பெற்றுக்கொண்டு மொத்தம் ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது பரமக்குடி 5 முனை சாலை பகுதியில் வந்த போது மழை பொய்ததால் அப்பகுதியில் ஓரமாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு ஒதுங்கி நின்றுள்ளார்.அப்போது அப்பகுதிக்கு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் மங்களநாதனை பணத்துடன் கடத்திச் சென்று மறவமங்கலம் பகுதியில் உள்ள தோப்பு ஒன்றின் வீட்டில் கட்டிவைத்து பணத்தை பறித்துக்கொண்டுள்ளனர்.பின்னர் கடத்திச் சென்ற கும்பல் மது போதையில் இருந்தபோது மங்களநாதன் மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டு நைசாக அங்கிருந்து தப்பி வந்துள்ளார்.பின்னர் இராமநாதபுரம் வந்த அவர் நகர் காவல்துறையினரிடம் தான் கடத்தப்பட்டது குறித்தும் தன்னிடம் இருந்த பணத்தை மர்ம கும்பல் பறித்து கொண்டது குறித்தும் புகார் அளித்தார்.இந்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் பெரியசாமி வழக்குப்பதிந்து விசாரனை செய்து வருகிறார்.மங்களநாதன் பணத்துடன் வருவதை அறிந்த நபர்கள்தான் இந்த செயலை செய்திருக்கலாம் என்று கருதி காவல்துறையினர் விசாரனையை தீவிரபடுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பரமக்குடி பகுதியில் நடந்திருப்பதால் வழக்கு விசாரனையை பரமக்குடிக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணண் உத்தரவிட்டுள்ளார். மங்களநாதனின் கார் ஓட்டுநராக பணியாற்றிய ஒருவருடைய நண்பரை போன்ற சாயலில் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் இருந்ததாக மங்களநாதன் தகவல் தெரிவித்துள்ளதால் அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

 693 total views