பத்திரிகைகளுக்கு உலை வைக்கும் வாட்ஸ்&அப்

பத்திரிகைகளுக்கு உலை வைக்கும் வாட்ஸ்&அப்

May 23, 2017 0 By BAHRULLA SHA

மாற்றம் ஒன்றே நிலையானது என்பார்கள். தகவல் தொழில் நுட்பத்தில் எவ்வளவு புரட்சிகள் வந்தாலும் பத்திரிகைகள் படிக்கும் வாசகர்கள் இன்றும் இருக்கிறார்கள். தற்போது தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியில் வாட்ஸ் அப்பின் பங்கு அதிகமாக உள்ளது. ஆன்ட்ராய்டு போன் வைத்து கொண்டு பல்வேறு தகவல்களை இன்று பலரும் உடனுக்குடன் அறிந்து கொள்கிறார்கள். பல முக்கிய தகவல்கள் உடனுக்குடன் வருகின்றன.
அப்படி இருக்க, பத்திரிகைகளுக்கு உலை வைக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் கடந்த ஒரு மாதமாக ஒரு நிகழ்வு நடந்து கொண்டிருக்கிறது. அனைத்து பத்திரிகைகளும் பி.டி.எப். பார்மெட் எனப்படும் வகையில், பைல்களாக தொகுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு குழுவில் அதிகபட்சம் 256 பேர் இருக்கிறார்கள். அவ்வாறு ஒரு பத்திரிகை பி.டி.எப். பைலில் சுமார் 30 முதல் 40 குழுக்களுக்கு பகிரப்படுகிறது. அவ்வாறு பகிரப்படும் குழுக்களை படிப்பவர்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். இது நல்ல விஷயம் தானே. இதற்கும் பத்திரிகைகளுக்கு உலை வைக்கும் வாட்ஸ் அப் என்ற தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று பலரும் கேட்கலாம். உங்களுக்கான விளக்கம் தான் இதோ…
பத்திரிகை என்பது நிருபர்கள், புகைப்படக்காரர்கள், பிழை திருத்துபவர்கள், உதவி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கணினி பிரிவில் உள்ளவர்கள், பக்கத்தை பிளேட்டாக எடுப்பவர்கள், மெஷினில் பொருத்துபவர்கள், ரீல்களை அதில் பொருத்தி ஓட்டுபவர்கள், பத்திரிகைகளாக பிரிண்டிங் செய்து எடுத்து வைக்கும் ஊழியர்கள், அதை பார்சல் செய்யும் ஊழியர்கள், அதை பல்வேறு ஊர்களுக்கு வாகனங்களில் கொண்டு செல்லும் டிரைவர்கள், அந்த பத்திரிகைகளை மொத்தமாக வாங்கும் ஏஜெண்டுகள், பிறகு அதை பல ஊழியர்களுக்கு பிரித்து, கடைகள், வீடுகளுக்கு பிரித்து கொடுக்கும் பணியாளர்கள் என்று பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள் உழைப்பில் வருவது.
ஒரு பத்திரிகை ஒரு நாள் வருவதற்கு பல ஆயிரக்கணக்கான ஊழியர்களின் உழைப்பு, வியர்வை, அடங்கி இருக்கிறது. இதில் பல இடங்களில் வசை சொற்கள், தகராறு, அவமானப்படுத்துதல், சகிப்பு தன்மை இதை அனைத்தையும் ஊழியர்கள் தாங்கி, குடும்பத்தை மறந்து இந்த பத்திரிகைகளை தினமும் காலையில் கொண்டு வர பாடுபடுகிறார்கள். இப்படி பலரது உழைப்பை சிலர் இணையதளத்தில் நோகாமல் டவுன்லோடு செய்து, அதை குரூப்புகளில் போடுகிறார்கள். இதனால் பத்திரிகைகள் படிக்க கூடிய வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைகிறது. உதாரணமாக ஒரு கடையில் ஒரு பத்திரிகை தினமும் 100 விற்பனை ஆகிறது என்றால், தற்போது அந்த பத்திரிகை 70 முதல் 80 தான் விற்கிறது.
மீதம் உள்ள 20 பத்திரிகைகள் விற்காமல் நின்று போக காரணம் என்ன என்று பார்த்தால் அதுவரை கடையில் வாங்கி படித்த சிலர், இப்போது யாரோ அனுப்பும் பி.டி.எப். பைலை படித்து பேப்பர் வாங்குவதை நிறுத்தி விட்டதாக சொல்கிறார்கள். இன்று 20 பத்திரிகை விற்காமல் போகிறது. நாளை அது 200 ஆகும். நாளை மறுநாள் அது 2 ஆயிரம் ஆகும். இப்படி போனால் அனைத்து பத்திரிகைகளும் விற்காமல் போய் ஒரு காலத்தில் பத்திரிகைகள் அனைத்தையும் மூடி விட்டு அதை நம்பி இருக்கும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தெருவில் போய் தான் நிற்க வேண்டிய சூழல் வரும்.
எனவே பத்திரிகை துறையில் உள்ள யாரும் நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு விசுவாசமாக இருப்பது உண்மை என்றால், இதுவரை உங்களையும் உங்களது குடும்பத்தையும் இந்த பத்திரிகை தான் காப்பாற்றியது, இனிமேலும் இந்த பத்திரிகை தான் காப்பாற்ற போகிறது என்பது உண்மை என்றால் பி.டி.எப். பைல்களில் வரக்கூடிய பத்திரிகைகளை தயவு செய்து ஆதரிக்காதீர்கள். யாருக்கும் பகிராதீர்கள். அதே போல இணையதளத்தில் பி.டி.எப். பைல்களாக பத்திரிகைகளை டவுன்லோடு செய்யப்படும் முறை தற்போது வந்து கொண்டிருக்கிறது.
முன்னணி பத்திரிகை நிறுவனங்கள் கூட அதை தடை செய்யவில்லை. உங்கள் பத்திரிகையின் செய்திகளை இணையதளத்தில் படிக்க வசதி செய்து கொடுங்கள். அது தப்பில்லை. அதே நேரத்தில் பத்திரிகைகளை பி.டி.எப். ஆக இணையதளத்தில் வரக்கூடிய முறையை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே ஊடகவியாலர்களின் எதிர்ப்பார்ப்பு.

336 total views, 2 views today