’நீட்’ தேர்வு மைய அதிகாரிகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டனம்

May 8, 2017 0 By BAHRULLA SHA

‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் மீதான உளவியல் தாக்குதல் என்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் என எஸ்.டி.பி.ஐ கட்சி கண்டித்துள்ளது.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“மருத்துவக் கல்வி படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 85 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இத்தேர்வின் போது சோதனை என்ற பெயரில் மாணவ மாணவிகள் மீது உளவியல் ரீதியான தாக்குதலை தேர்வு மைய அதிகாரிகள் நடத்தியுள்ளனர்.

தேர்வெழுத வந்த மாணவர்களிடம் பலத்த கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. அவர்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தும், தலைமுடி, காது போன்றவற்றை டார்ச் அடித்து கடும் சோதனைகளையும் மேற்கொண்டுள்ளனர். இதனால் தமிழக மாணவ, மாணவிகள் ஒருவித பதட்டத்துடனேயே தேர்வெழுதியுள்ளனர்.

மேலும், ‘நீட்’ தேர்வெழுதும் மாணவ, மாணவிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்த போதிய தகவல் கிராமப்புறத்திலிருந்து தேர்வெழுத வந்த மாணவர்களுக்குத் தெரியப்படுத்தப்படாததால், தேர்வு மையங்களுக்கு வந்த பின்பு அவர்கள் கத்தரிக்கோலால் சட்டையைக் கிழித்துக்கொண்டு தேர்வு எழுதச் சென்ற அவலம் பல இடங்களில் நேரிட்டுள்ளது. பல தேர்வு மையங்களில் மாணவிகள் துப்பட்டா அணிவதற்கும் அனுமதிக்கப்படவில்லை. எல்லாவற்றையும் விட கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடையில் மெட்டல் ஊக்கு இருந்த காரணத்தால் உள்ளாடையை அகற்ற வேண்டும் என்ற தேர்வு மைய அதிகாரிகளின் கெடுபிடி உச்சக்கட்ட மனித உரிமை மீறலாகும். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

மேலும், “உச்ச நீதிமன்றம் ஆதாரை அனைத்து திட்டங்களுக்கும் கட்டாயமாக்கக் கூடாது என்று வலியுறுத்திய போதும், தேர்வு எழுதிய மாணவர்களிடம் ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என கூறியுள்ளனர்.

தேர்வில் காப்பி அடித்து முறைகேடு செய்வதை தடுக்கவே இத்தகைய அடக்குமுறைகள் என விளக்கம் அளிக்கும் ‘நீட்’ ஆதரவாளர்கள், ராஜஸ்தானிலும், பீகாரிலும் ‘நீட்’ தேர்வு வினாத்தாள் தேர்வை நடத்தும் சிபிஎஸ்இ-ஐ சேர்ந்த ஒருவராலேயே பல லட்சங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்.

‘நீட்’ தேர்வுக்காக தமிழகம் மற்றும் கேரளாவில் கடுமையான முறையில் ஆடைக்கட்டுப்பாடுகள், சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், குஜராத், உத்திர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் அத்தகைய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படவில்லை. அங்கு மாணவர்கள் முழுக்கை சட்டையுடன் ‘நீட்’ தேர்வு எழுதியதை ஊடக செய்திகளில் காண முடிகிறது. ஏன் இத்தகைய பாரபட்சம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாற்றமாக, தமிழக மாணவர்களின் நலனுக்கு எதிராக நடைபெற்றுள்ள ‘நீட்’ தேர்வில், அவர்களை உளவியல் ரீதியாக கடும் தாக்குதலுக்கு ஆளாக்கியது குறித்து தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அவலநிலைக்கு, மத்திய அரசின் ‘நீட்’ தேர்வு செயல் திட்டத்தை தமிழக அரசு வலுவாக எதிர்த்து களமாடாததும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. ஆகவே, இனியும் காலம் தாழ்த்தாமல், தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’டிலிருந்து விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதலைப் பெற தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.”

– இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

275 total views, 2 views today