நாராயணசாமி என்னை மிரட்டுகிறார்: கவர்னர் கிரண்பேடி

நாராயணசாமி என்னை மிரட்டுகிறார்: கவர்னர் கிரண்பேடி

முதல்-அமைச்சர் நாராயணசாமியின் போக்கு தன்னையும், பத்திரிக்கைகளையும் மிரட்டும் வகையில் உள்ளது என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்

புதுவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளதாக சி.பி.ஐ.க்கு கவர்னர் கிரண்பேடி புகார் செய்தார்.
கவர்னர் கிரண்பேடியின் புகாரை தொடர்ந்து சி.பி.ஐ. போலீசார் புதுவையில் விசாரணை நடத்தினர். பின்னர், 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட 6 அரசு அதிகாரிகள் மற்றும் 7 தனியார் கல்லூரி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

புதுவை அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கவர்னர் கிரண்பேடி அரசு அதிகாரிகள் யார் தூண்டுதலின் பேரில் முறைகேட்டை செய்தனர் என்பதை தெரிவிக்க வேண்டும் என சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதற்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடக்கும்போது அரசு அதிகாரிகளை மிரட்டும் வகையில் கவர்னர் செயல்படுகிறார். தேவைப்பட்டால் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி கவர்னர் மீது கிரிமினல் வழக்கு தொடருவோம் என நாராயணசாமி கூறினார்.

மேலும், புதுவை அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் கவர்னர் சமூக வலைதளங்களில் வெளியிடும் செய்திகளையும், தவறான தகவல்களையும் வெளியிடும் பத்திரிக்கைகள் மீதும் அவதூறு வழக்கு தொடருவோம் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.

இதுதொடர்பாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் முதல்-அமைச்சர் நாராயணசாமியின் போக்கு தன்னையும், பத்திரிக்கைகளையும் மிரட்டும் வகையில் உள்ளது என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கருத்து பதிவு வருமாறு:-

புதுவை அரசின் 6 மூத்த அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளரை அழைத்து விளக்கம் கேட்காமல், தங்கள் பணியை சீராக செய்தமைக்காக கவர்னரையும், ஊடகங்களையும் முதல்-அமைச்சர் மிரட்டுகிறார். அரசியலமைப்பு சட்ட பதவியான கவர்னர் பதவியே மிரட்டலுக்கு ஆளாகியுள்ளது.

ஒவ்வொரு அரசு அதிகாரிக்கும் ஆண்டு செயல்பாட்டுக்கு தகுதிச் சோதனை இருப்பது போல, ஏன் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இருக்கக்கூடாது? தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் வாக்காளர்களுக்கு அவர்களது ஆண்டு செயல்பாடு அறிக்கையை அறிய உரிமை இருக்கிறது.

இவ்வாறு கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
புதுவை.அ.யூசுப்

1,442 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply