நவீன இந்திய வரலாறு : ஓர் அறிமுகம்

நவீன இந்திய வரலாறை அதன் அத்தனை சிக்கல்களோடும் சவால்களோடும் இரண்டு அட்டைகளுக்கு இடையில் முழுமையாக அடக்கிவிடவேண்டும் என்னும் அசாத்தியக் கனவுடன் இதனை நான் ஆரம்பிக்கவில்லை. 1947க்குப் பிறகான இந்திய அரசியல் களத்தை மையப்படுத்தி அமையப்போகும் இந்தத் தொடர் வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்தையும், ஒவ்வொரு அரசியல் நிகழ்வையும்,
ஒவ்வொரு சமூக மாற்றத்தையும் பதிவு செய்யப்போவதில்லை. இதன் இலக்கு சற்றே விரிவானது.
ஒரு தேசத்தைப் புரிந்துகொள்ள பல வழிகள் உள்ளன. அந்நாட்டின் ஆட்சியாளர்களையும் அவர்களுடைய அரசியல் செயல்பாடுகளையும் பரிசீலித்து அந்தச் செயல்பாடுகள் சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று கவனித்து மதிப்பிடுவது ஒரு வழிமுறை. இந்த அணுகுமுறையைப் பின்பற்றி எழுதப்படும் பிரதிகளின் அடிப்படை அதிகாரத்தில் இருப்பவர்களே வரலாறைத் தீர்மானிக்கிறார்கள் என்பதுதான். செல்வாக்கு மிக்கவர்களை மையப்படுத்தி மேலிருந்து கீழாகப் பார்த்து எழுதப்படும் இத்தகைய பிரதிகளைப் புறந்தள்ளிவிட்டு கீழிருந்து மேலாக, அதாவது அதிகாரத்துக்கு உட்பட்டிருந்த மக்களை மையப்படுத்தி வரலாறை அவர்கள் பார்வையில் அணுகும் முறை வரலாற்றுத் துறையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது.
இது மிகச் சமீபத்தில் ஏற்பட்ட ஒரு திசை மாற்றம். E.P. தாம்ஸன் எழுதிய The Making of the English Working Class, ஹோவர்ட் ஜின் எழுதிய A People’s History of the United States, க்ரிஸ் ஹார்மன் எழுதிய A People’s History of the World
உள்ளிட்ட புத்தகங்கள் வரலாறை ஆராயும், எழுதும் மற்றும் வாசிக்கும் முறையை முற்றிலும் மாற்றியமைத்தன.
இந்திய வரலாறு குறித்த அத்தகைய வரலாற்றுப் பிரதிகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து எளிமையாக அறிமுகம் செய்வதே இத்தொடரின் நோக்கம்.
ஆங்கிலத்தோடு ஒப்பிடும்போது தமிழில் எழுதப்படும்,
மொழிபெயர்க்கப்படும் வரலாற்றுப் படைப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. (இது வேறு பல துறைகளுக்கும்கூட பொருந்தும்). இந்த வெற்றிடத்தை ‘பிரபல வரலாற்றுப் புத்தகங்கள்‘
பிடித்துக்கொண்டுவிட்டன.
தேவைக்கு அதிகமாக எளிமைப்படுத்தப்பட்ட,
மிகைப்படுத்தப்பட்ட,
மேலோட்டமான தகவல்களை வைத்துக்கொண்டு வாசிப்பதற்கு அழகான முறையில் சித்திரிக்கப்பட்ட இந்தப் பிரதிகளே வரலாறு என்னும் பெயரில் அதிகம் வெளிவந்துள்ளன. இந்தத் தவறுகள் அனைத்தையும் என்னுடைய பல முந்தைய புத்தகங்களில் நானே செய்துமிருக்கிறேன். இந்தத் தவறுகளைத் திருத்திக்கொள்ள,
அதைவிட முக்கியமாக இவை தவறுகள் என்று உணர்ந்துகொள்ள சில புத்தகங்கள் பெரிதும் உதவின. வரலாறு எப்படி எழுதப்படவேண்டும் என்று மட்டுமல்ல எவ்வாறு வாசிக்கப்படவேண்டும் என்பதையும் இவை கற்றுக்கொடுத்தன.
சுவாரஸ்யமான வரலாற்றுப் பிரதிகளுக்கான அவசியத்தை நான் மறுக்கவில்லை. ஓர் அறிமுகம் என்னும் வகையில் வரலாற்றுத் துறையை நோக்கி வாசகர்களை ஈர்க்கும் தூண்டில்களாக இவற்றால் செயல்படமுடியும். ஆனால் இந்தத் தூண்டில்களில் சிக்கும் சிறு மீன்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு முழுக் கடலையும் தெரிந்துகொண்டுவிட்டதாக நாம் திருப்திபட்டுக்கொண்டால் இழப்பு நமக்குத்தான்.
வரலாறை அதனை முறைப்படி ஆய்வுசெய்த வரலாற்றாசிரியர்களிடம் இருந்து கற்பதே சரியான அணுகுமுறை. அவ்வாறு கற்கும்போது இதுவரை நாம் தெரிந்துவைத்திருக்கும் கதைகளையும் நிகழ்வுகளையும் சம்பவங்களையும் கடந்து அடுத்த கட்டத்துக்கு முன்னேறுகிறோம்.
கொடுப்பதை வெறுமனே உள்வாங்கிக்கொள்ளாமல் கேள்விகள் எழுப்பத் தொடங்குகிறோம்.நாம் அறிந்துவைத்துள்ள பிரபலப் பிரதிகளிடமிருந்தும் அவை உணர்த்தும்
‘உண்மைகளிலிருந்தும்‘
விலகிச் செல்கிறோம். தேடல் விரிவடைகிறது. சமூகவியல்,
பொருளாதாரம், கலை,
அரசியல். தத்துவம் என்று பல துறைகளிலிருந்து திரட்டிக்கொண்ட வெளிச்சங்களை வரலாற்றின்மீது பாய்ச்சி நம் புரிதலை விசாலப்படுத்திக்கொள்கிறோம்.
இறப்பதற்குமுன் ஒருவர் அவசியம் படிக்கவேண்டியவை என்னும் தலைப்பில் துறை வாரியாகச் சிறந்த படைப்புகளைப் பட்டியலிட்டு எழுதினார் ஓர் அமெரிக்க எழுத்தாளர்.
ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய் போன்றோரைக் குறிப்பிடும்போது அவர் ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்தினார்.
மற்றவர்களைப் போல் இவர்களை அணுகமுடியாது. இவர்களைப் புரிந்துகொள்ளவேண்டுமானால் நாமும் சில பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நம்மைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும்.
மலையேறுவதற்கு ஒப்பான இந்த முயற்சியில் நாம் பலமுறை சறுக்கக்கூடும்,
தடுமாறி விழக்கூடும்.
ஆனால் ஒன்று நிச்சயம்.
இவர்களைக் கற்றுத் தேர்வதல்ல;
கற்க முயற்சி செய்வதேகூட ஒரு நல்ல அனுபவம்தான்.
அத்தகைய ஒரு முயற்சிதான் இது.

555 total views, 0 views today


Related News

  • மறைக்கப்பட்ட வரலாறுகள்
  • வரலாறு பேசுகிறது(தஞ்சை பெரிய கோவில்)
  • 1000 ஆண்டுகள் வரலாறு பேசும் பொந்தன் புளி மரங்கள்!
  • நவீன இந்திய வரலாறு : ஓர் அறிமுகம்
  • தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப்பகுதியில் 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமணப்பள்ளி கண்டுபிடிப்பு
  • தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா (தமிழன்டா)
  • தமிழர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்வோம்
  • தமிழ் மற்றும் தமிழர்கள் வளர்ந்த வரலாறு
  • Leave a Reply