சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் உள்ள பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவப்பா(50). இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடையை ஒட்டியுள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் திடீரென தீப்பிடித்துள்ளது. மளிகைக்கடையில் இருந்த மாதேவப்பா அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து ஆசனூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதற்கிடையில் கிராம மக்கள் திரண்டு வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். தீ வேகமாக பரவி வீட்டின் முன்புள்ள மளிகைக்கடைக்கும் பரவியது.
இந்நிலையில் ஆசனூரிலிருந்து பனகள்ளி கிராமம் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் தீயணைப்பு வாகனம் சென்று சேர தாமதமானது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அரைமணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்திலிருந்து பொருட்களை காப்பாற்ற முயற்சித்த மாதேவப்பா மற்றும் அவரது மஞ்சுளாவிற்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. விபத்தில் பீரோ, கட்டில், டிவி, வாசிங்மெஷின், கிரைண்டர், மின்விசிறி, ரேசன்கார்டு, பீரோவில் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.2.50 லட்சம், 4 சவரன் தங்க நகை மற்றும் மளிகைப்பொருட்கள் எரிந்து நாசமானது. சேதமதிப்பு ரு.6 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. காயம்பட்ட மாதேவப்பாவும், மஞ்சுளாவும் சிகிச்சைக்காக தாளவாடி ஆரம்ப சுகாதார ஆரம்பசுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த நிலவருவாய் ஆய்வாளர் சுரேந்தர், பனஹள்ளி விஏஓ சித்தராஜ் மற்றும் தாளவாடி போலீசார் தீ விபத்து நடைபெற்ற வீட்டை பார்வையிட்டனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 589 total views