தரம்சாலா டெஸ்ட்: 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 248/6

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 300 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஸ்மித் சதம் (111) அடித்தார். வார்னர், வடே அரைசதம் அடித்தனர்.

இந்திய அணி சார்பில் புதுமுக வீரர் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு ஓவர் மட்டுமே விளையாடி ரன் எதுவும் எடுக்காமல் இருந்தது.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்க வீரர்கள் முரளி விஜய், லோகேஷ் ராகுல் தொடர்ந்து விளையாடினர். ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹசில்வுட் ஆகியோர் தங்களது வேகப்பந்து வீச்சால் இருவரையும் மிரட்டினார்கள்.

ஸ்விங், சீம், பவுன்ஸ் என தொடர் தாக்குதல் நடத்தினார்கள். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்தார்கள். இறுதியில் இந்திய அணியின் ஸ்கோர் 10.2 ஓவரில் 21 ரன்னாக இருக்கும்போது முரளி விஜய் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்து புஜாரா களம் இறங்கினார். ராகுல், புஜாரா ஜோடி மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்திய அணி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 1 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது. ராகுல் 31 ரன்னுடனும், புஜாரா 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், இருவரும் ரன்குவிக்க தொடங்கினார்கள். லோகேஷ் ராகுல் 98 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய லோகேஷ் ராகுல் 60 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார்.

அப்போது இந்தியா 40.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. 3-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று ஆடியது. புஜாரா 132 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி மதிய தேனீர் இடைவேளை வரை வி்க்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது.

2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 60 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 53 ரன்னுடனும், ரகானே 19 ரன்னுடனும் களத்தில் இருந்தது. முதல் இரண்டு செசனிலும் இந்தியா இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்திருந்தது.
தேனீர் இடைவேளை முடிந்தபின் ஆட்டம் தொடங்கியதும் இந்திய விக்கெட்டுக்கள் மளமளவென சரிய ஆரம்பித்தது. இதனால் ஆட்டம் ஆஸ்திரேலியா கைக்குச் சென்றது. புஜாரா (57), கருண் நாயர் (5) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த அஸ்வின் அதிரடியாக விளையாடி 49 பந்தில் 30 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். கேப்டன் ரகானே 46 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்தியா 221 ரன்கள் எடுப்பதற்குள் மேலும் நான்கு முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. தேனீர் இடைவேளைக்குப் பின் 68 ரன்னிற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.

7-வது விக்கெட்டுக்கு சகாவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும்வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சகா 10 ரன்னுடனும், ஜடேஜா 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

தற்போது வரை இந்தியா ஆஸ்திரேலியாவை விட 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. கைவசம் 4 விக்கெட்டுக்கள் உள்ளன. நாளை 3-வது நாள் ஆட்டத்தில் சகா – ஜடேஜா ஜோடி 300 ரன்கள் வரை தாக்குப்பிடித்து விளையாடினால், இந்த டெஸ்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது.

335 total views, 2 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close