வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த மழை, சாரல் மழை பெய்வதால் பகல் நேரத்திலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதுடன், நிலத்தடி நீரும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மெரினா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு 3 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய இடங்களில் மழை பெய்தால் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது.

திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை, தேனி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. நாகை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிலச்சரிவு அபாயமுள்ள 67 இடங்களில் இருந்து பொதுமக்களை முகாம்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழையால் 100க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு, மண்சரிவு ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை உதகை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

குன்னூர் மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிந்து மரங்களுடன் சாலையில் விழுந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பணியாளர்கள் ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு மரம் மற்றும் மண்ணை அகற்றிய பின் போக்குவரத்து சீரடைந்தது.

இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், 67 இடங்கள் மிகவும் அபாயகரமானது என்பதால் பொதுமக்கள் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழகத்தில் இரண்டாவது பெரிய அணையான பவானிசாகர் அணையில் இருந்து 10 ஆயிரத்து 550 கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

அங்குள்ள நீர்மின் அணைகள் நிரம்பியதால் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நள்ளிரவில் 102 அடியை எட்டியதால், 5 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் திறக்கப்பட்டது.

பவானி ஆற்றின் கீழ் மதகுகள் மற்றும் நீர்ப்போக்கி மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுவதால் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், நீர்வரத்தை பொறுத்து நீர்திறப்பின் அளவு மாறுபடும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

196 total views, 3 views today