சென்னை,

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்று(வெள்ளிக்கிழமை) இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள்மாவட்டங்களில்…

தென்மேற்கு பருவமழை ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்த பருவமழை காலத்தில் தமிழகம் மழை மறைவு பிரதேசமாக இருந்தாலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

இடியுடன் கூடிய மழை பெய்யும்

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக அதிக இடங்களில் மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் (இன்று), வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மாலை அல்லது இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
கடல் காற்று மணிக்கு 45 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வரை வீசும். எனவே மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

மழை அளவு

தென்மேற்கு பருவமழை காலமான தற்போது கடந்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் சராசரி அளவை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது. அதாவது, கடந்த ஒருவாரத்தில் மட்டும் தமிழகத்தில் 1.9 செ.மீ. மழை பதிவாக வேண்டும். ஆனால் சராசரியை விட 82 சதவீதம் அதிகமாக 3.45 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

கோவில்பட்டியில் 8 செ.மீ., தொழுதூர், வால்பாறை, திருமனூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ., புள்ளம்படி, அரிமளம், பாபநாசம்(தஞ்சாவூர் மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., சாத்தூர், சமயபுரம், குடியாத்தம், செந்துறை, மேலாலாத்தூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., திருவையாறு, பாபநாசம் (திருநெல்வேலி மாவட்டம்), திருக்காட்டுப்பள்ளி, அரியலூர், மேலூர், சின்னக்கலாறு ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

1,099 total views, 2 views today