ஜெயலலிதா நினைவுநாள், முதலமைச்சர் உள்ளிட்டோர் அஞ்சலி

ஜெயலலிதா நினைவுநாள்…முதலமைச்சர் உள்ளிட்டோர் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

சென்னை அண்ணா சாலையில் துவங்கிய பேரணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கருப்புச்சட்டை அணிந்து பங்கேற்றனர்.

மேலும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களும் பேரணியில் பங்கேற்று ஊர்வலமாக வந்தனர்.

அண்ணா சாலையில் துவங்கிய பேரணியானது வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொள்வது என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

இந்த அமைதிப் பேரணியை முன்னிட்டு காமராஜர் சாலை, வாலாஜா சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வழித்தடத்தில் வரும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இதையொட்டி 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தமிழகம் முழுவதிலுமிருந்து ஜெ நினைவிடத்தில் குவிந்து வரும் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

93 total views, 3 views today