ஜப்பானை சக்திவாய்ந்த ஹகிபிஸ் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானை நெருங்கி வந்து கொண்டிருக்கும் ஹகிபிஸ் புயலின் காரணமாக தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் கடலும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

இச்சிகாரா நகரில் சுழற்காற்றின் காரணமாக 4 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு டோக்யோவில் அதிவேகமாக காற்று வீசி வரும் நிலையில், சிபா பகுதியில் சுழற்காற்றினால் கார் ஒன்று புரண்டு விழுந்ததில் அதனுள் இருந்த நபர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிலிப்பைன்ஸ் மொழியில் ஹகிபிஸ் என்றால் வேகம் என்று பொருள். அதிக அழிவை ஏற்படுத்தும் புயலாக வகைப்படுத்தப்பட்டுள்ள ஹகிபிஸ் புயல், சனிக்கிழமை மாலை கரையை கடக்கும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அந்த சமயத்தில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்யும் எனவும், மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடைகள், தொழிற்சாலைகள், சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. ஜப்பானில் இன்று நடைபெறவிருந்த பார்முலா ஒன் கார் பந்தயம் மற்றும் உலகக் கோப்பை ரக்பி போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

247 total views, 3 views today