சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சிக்கு வரும் சிறுவர், சிறுமிகள் அறிவுத்திறனை மேம்படுத்தும் செயல்பாட்டு நூல்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சிறுவர் சிறுமிகளுக்கான ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள் சென்னை பெருநகரத்தில் பரந்து விரிந்து கிடக்கின்றன. ஆனால் பொழுது போக்குடன் சேர்த்து அறிவை வளர்க்க ஓரிடம் இல்லை என்ற குறையை போக்கி உள்ளது சென்னை புத்தகக் கண்காட்சி. புத்தகக் கண்காட்சிக்குப் படையெடுக்கும் பெரியவர்களோடு, அவர்கள் வீட்டுச் சிறுவர்களும் ஆர்வமுடன் வந்து புத்தகங்களைப் பார்வையிட்டு பிடித்தவற்றை வாங்கிச் செல்கின்றனர்.

புத்தகக் கண்காட்சிக்கு வருவது தங்களுக்கு புதுவித அனுபவத்தைத் தருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அறிவியல், மொழி, கணிதம், விளையாட்டு என அவர்களின் அறிவுத் தேடலுக்குத் தீனி போட ஏராளமான புத்தகங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறார்களின் வருகை அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து புத்தகங்களைப் படிப்பதன் மூலம் குழந்தைகளின் எண்ண ஓட்டம் சீராக இருக்கும் என்றும் அதையும் தாண்டி புத்திக் கூர்மை, நினைவாற்றல் மேம்பாடு போன்றவையும் சாத்தியமாகும் என்கின்றனர் அறிஞர்கள். 3 வயதிலேயே குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி தொடங்குவதாகக் கூறும் அவர்கள், அந்தப் பருவத்தில் புத்தக வாசிப்பை அவர்களுக்குப் பழக்கப்படுத்துவது அவசியம் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வரும் பெரும்பாலான சிறுவர், சிறுமியரின் கண்களில் ஒருவித ஆர்வத்தைப் பார்க்க முடிகிறது. அந்த ஆர்வத்தைப் புரிந்து கொள்ளும் பெற்றோரும் அதே ஆர்வத்தோடு அவர்கள் கேட்கும் புத்தகங்களை வாங்கித் தருவதையும் காண முடிகிறது. ஆரோக்கியமான ஒரு தலைமுறை நிச்சயம் உருவாகும் என்ற நம்பிக்கையும் நமக்குள் பிறக்கிறது.

460 total views, 3 views today