கோவை மாநகராட்சியில் உள்ள பதிவு செய்யப்பட்ட சாலையோர வியாபாரிகள் ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் . தெரிவித்துள்ளார்கள்.

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் .ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் வங்கி கடன் வழங்குவதற்கான ஆலோசணைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரடங்கு உத்தரவு காலத்தில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் அவர்களுக்கு தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு தலா 1000 வீதம் வழங்க உத்தரவிட்டத்தைத் தொடர்ந்து கோவை மாநகராட்சியில் இதுவரையில் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்த 5430 சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கணக்கின் மூலம் தலா 1000 வீதம் 54 லட்சத்து 30 ஆயிரம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு காலத்தில் சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்காமல் தங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் சாலையோர வியாபாரிகளுக்கு பிரதமரின் ஆத்மநிர்பார் நிதி (சுயசார்பு) திட்டத்தின் மூலம் பதிவு பெற்றுள்ள சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கிகள் மூலம் கடன் உதவித்தொகையும்,

பதிவு செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது. மாநகரப் பகுதிகளில் மத்திய அரசின் தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் வங்கி கடன் உதவித்தொகை பெற விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் தங்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.

எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பதிவு செய்யப்பட்டு அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள் தங்களின் விபரங்களை பதிவு செய்து வங்கி கடனை பெறலாம். பதிவு செய்யும்பொழுது தங்களது அலைபேசி, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், மாநகராட்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல்கள் ஆகிய ஆவணங்களுடன் ஆண்லைனில் விண்ணப்பித்து வங்கி கடனை பெறலாம் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் உதவி ஆணையர் (வருவாய்) திரு.அண்ணாதுரை, நகரமைப்பு அலுவலர் திரு.ரவிச்சந்திரன் மற்றும் அதனைச் சார்ந்த பொறுப்பு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

 82 total views