தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க மற்றும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். எதிரணியான ஓ.பன்னீர்செல்வம் அணியில் குறைந்தபட்ச எம்.எல்.ஏ.க்களே இருந்தாலும், எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாளையே (18.02.2017) பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார். இதற்காக நாளை சட்டசபை கூட்டத்தைக் கூட்ட சபாநாயகர் ப.தனபால் உத்தரவிட்டுள்ளார். இதற்காக ஆயத்தமாகி வரும் எடப்பாடி பழனிச்சாமி, எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கொறடாவின் உத்தரவின்படி வாக்களிக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர் பரிந்துரை செய்யலாம். இந்த வகையில், ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அனைவரும், நாளை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது சட்டமன்றத்திற்கு வரவேண்டும் என அக்கட்சியின் கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து எம்.எல்.ஏ.க்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இருக்கும் தி.மு.க வின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. தி.மு.கவின் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க திமுக சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற கூட்டத்திலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிக்க காங்கிரஸ் கட்சி முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது

 567 total views,  2 views today