கோவை பாராளுமன்ற உறுப்பினர். பி. ஆர். நடராஜன், திமுக எம். எல். ஏ நா. கார்த்திக் கைது !!

கோவை மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்ட கோவை பாராளுமன்ற உறுப்பினர். பி. ஆர். நடராஜன் மற்றும் திமுக எம். எல். ஏ நா. கார்த்திக் உள்பட கூட்டணி கட்சியினர் கைது!

கோவை சிங்காநல்லூர் – எஸ்.ஐ.எச்.எஸ் (SIHS) காலனி செல்லும் சாலையில் கடந்த 2010-ம் ஆண்டு ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்ட ரூ. 23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசாணை வெளியிடப்பட்டது. 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த அணுகு சாலைக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தாமல் பணிகளை மேற்கொண்டதால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இழப்பீடு தொகை வழங்காத காரணத்தால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த மேம்பாலக் கட்டுமானப் பணிகளுக்கு இடைக்கால தடை விதித்தது. கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகளுக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் பணிகள் முழுமையடையாமல், பாதியில் நிற்கின்றன. இதன் காரணமாக, நோதாஜிபுரம், தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, கங்கா நகர், காவேரி நகர், திரு.வி.க. நகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், உயர்மட்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகளை உடனடியாக முடிக்காததைக் கண்டித்து எஸ்.ஐ.எச்.எஸ். ரயில்வே மேம்பாலம் அருகில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், தி.மு.க. சொத்து பாதுகாப்புக் குழு தலைவர் பொங்கலூர். பழனிசாமி, இந்திய காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மோகன்குமார், சி.பி.ஐ.(எம்) மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சுந்தரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தனபால், திராவிடர் கழக சிற்றரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல பொறுப்பாளர் சுசி கலையரசன் பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு. ராமகிருஷ்ணன், ஆதிதமிழர் பேரவை ரவிக்குமார், உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

மேம்பால கட்டுமான பணிகளை உடனடியாக துவக்க வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

187 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close