கோவை அருகே கைதான மாவோயிஸ்டுகள் 5 பேர் கோவை கோர்ட்டில் ஆஜர்

September 10, 2015 0 By admin
கோவை,
கோவை அருகே கைதான மாவோயிஸ்டுகள் 5 பேரும் நேற்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட் டனர். அவர்களுக்கு அடுத்த மாதம் 7–ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

மாவோயிஸ்டுகள் கைது

கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் கடந்த மே மாதம் 4–ந் தேதி மாவோயிஸ்டு இயக்க தலை வன் ரூபேஷ், அவருடைய மனைவி சைனா மற்றும் மாவோயிஸ்டுகள் அனூப், கண்ணன், வீரமணி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்கள் மீது கேரள மாநிலத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவ்வப்போது அவர்களை போலீசார் கேரளாவுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவை மத்திய சிறை யில் அடைக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிந்தது.

கோர்ட்டில் ஆஜர்

இதனால் அவர்கள் 5 பேரையும் கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர். பின்பு, நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது நீதிபதியிடம், ரூபேசும், சைனாவும், சிறையில் இருக்கும் தங்களுக்கு சனிக்கிழமை தோறும் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சனிக்கிழமை விடுமுறை என்பதால் சந்திக்க முடிய வில்லை. எனவே சனிக்கிழமை விடுமுறை வரும்போது மற்றொரு நாள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கோவை கோர்ட்டிலேயே 5 நிமிடம் சந்தித்து பேச நீதிபதி அனுமதி அளித்தார்.

காவல் நீட்டிப்பு

அதுபோன்று சைனா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், எனது குழந்தைகள் மற்றும் உறவினர்கள் எர்ணாகுளத்தில் வசித்து வருகிறார்கள். அத்துடன் கேரள போலீசார் அடிக்கடி என்னை கேரளா அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே என்னை கோவை சிறையில் இருந்து எர்ணாகுளம் சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
மேலும் கியூ பிராஞ்ச் போலீசார், எங்களிடம் கையெழுத்து கேட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருக்கிறோம். அந்த வழக்கு நிலுவையில் இருப்பதால், அதை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் அடுத்த மாதம் (அக்டோபர்) 7–ந் தேதி வரை கோவை சிறையில் அடைக்க நீதிபதி பொங்கியப்பன் உத்தரவிட்டார். போலீசார் அவர்களை பலத்த பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.

போராட்டம் தொடரும்

முன்னதாக மாவோயிஸ்டுகள் கோவை கோர்ட்டுக்கு வந்தபோது, ‘ஜிந்தாபாத், ஜிந்தாபாத், மாவோயிஸ்டு ஜிந்தாபாத், மாவோயிஸ்டுகள் வாழ்க’ என்பது உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
மேலும் அவர்கள் அங்கு நின்றிருந்த நிருபர்களை பார்த்து கூறும்போது, ‘கேரள போலீசார் தொடர்ந்து எங்களை மிரட்டி வருகிறார்கள். இருந்தாலும் எங்களின் போராட்டத்தை தடுக்க முடியாது. போராட்டங்கள் தொடரும்’ என்றனர்.

862 total views, 2 views today