கோவையில் வனத்துறை விளையாட்டு போட்டி: அமைச்சர் ஆனந்தன் தொடங்கி வைத்தார்

September 11, 2015 0 By admin
கோவையில் உள்ள மாநில வனக்கல்லூரி விளையாட்டு திடலில் மாநில வனத்துறையின் 22–வது விளையாட்டு போட்டி தொடக்க விழா இன்று நடைபெற்றது. போட்டிகள் வருகிற 13–ந் தேதி வரை நடைபெறுகிறது.
தொடக்க விழாவுக்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலாளர் ஹன்ஸ் ராஜ்வர்மா தலைமை தாங்கினார்.
தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டிகளை தொடங்கி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் வனத்துறை சார்பில் பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் வனவிலங்குகள் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசின் நிவாரண நிதியையும் வழங்கினார். அதைத்தொடர்ந்து கோவை வனக்கோட்டத்தில் மனிதர்கள்– வன விலங்குகள் மோதலை தடுக்கும் திட்டத்தை (திட்டம் களிறு) தொடங்கி வைத்து அதற்கான லோகோவையும் வெளியிட்டார்.
அதன் பின்னர் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் பேசும் போது தமிழகத்தில் 17 சதவீதமாக இருந்த வனப்பரப்பு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 18.33 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வனத்துறையை மேம்படுத்த மேலும் பல கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இது வருங்கால சந்ததிகளின் வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும். உயிர் பன்மை பாதுகாப்பு திட்டம் மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் தனியார் நிலங்களில் மரம் நடுதல் மூலமாக 2,978 கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என்றார்.
விளையாட்டுப்போட்டி தொடக்க விழாவில் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மெல்கானி, கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், மேயர் கணபதி ராஜ்குமார். நாகராஜன் எம்.பி., மலரவன் எம்.எல்.ஏ., கோவை மாவட்ட வன அலுவலர் செந்தில் குமார், மண்டல தலைவர்கள் சாவித்திரி பார்த்திபன், நடராஜ், குழு தலைவர் அம்மன் அர்ஜூனன், போனஸ் பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போட்டியில் சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், நெல்லை, திருச்சி, வேலூர் உள்பட 12 வன சரகங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

1,684 total views, 2 views today