கோவையில் அனுமதியின்றி செயல்பட்ட 2 தனியார் காப்பகங்களில் தங்கி இருந்த 44 குழந்தைகள் மீட்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

September 10, 2015 0 By admin
கோவை,
கோவையில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 தனியார் காப்பகங்களில் தங்கி இருந்த 44 குழந்தைகளை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர்.

தனியார் காப்பகங்கள்

கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் கார்னர் ஸ்டோன், கிறிஸ்துகம்பேசன் ஆகிய 2 தனியார் குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வந்தன. இந்த காப்பகங்கள் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக்கிற்கு புகார் சென்றது.
எனவே இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தர விட்டார். அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விஜயா, கோவை மாநகர ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் மற்றும் சிங்காநல்லூர் போலீசார் நேற்று காலையில் அந்த 2 தனியார் காப்பகங்களுக்கும் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

அனுமதி இல்லை

அப்போது அந்த 2 காப்பகங்களில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு போதிய இடவசதி, சமையலறை வசதி, குளியலறை உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததும், அனுமதி இல்லாமல் அந்த 2 காப்பகங் களும் செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த காப்பகங்களை மூட உத்தரவிட்டனர். மேலும் அங்கு தங்கி இருந்த 6 சிறுமிகள் உள்பட 44 குழந்தைகளை மீட்டு உக்கடம் மற்றும் அத்திப்பாளையம் பிரிவில் உள்ள காப்பகங்களில் ஒப்படைத்தனர்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி விஜயா கூறியதாவது:–

குழந்தைகள் மீட்பு

கோவை வரதராஜபுரத்தில் செயல்பட்டு வந்த 2 குழந்தைகள் காப்பகங்களிலும் போதிய இடவசதி இல்லை. அங்கு 6 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வந்தனர். அதில் 6 சிறுமிகளும் உள்ளனர். அந்த சிறுமிகளை தனியாக வைக்காமல், சிறுவர்களுடன் சேர்த்தே தங்க வைத்து உள்ளனர். அத்துடன் அங்கு கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட வில்லை.
மேலும் அந்த 2 காப்பகங்களில் தங்கி இருக்கும் குழந்தைகளுக்கு போதிய உணவு பொருட்களும் இருப்பு வைக்கப்பட வில்லை. அத்துடன் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட வில்லை. எனவே அங்கு தங்கி இருந்த குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு உள்ளனர்.

பெற்றோருக்கு தகவல்

மீட்கப்பட்ட 44 குழந்தைகளில் 38 பேர் கோவை உக்கடத்தில் உள்ள டான்போஸ்கோ காப்பகத்திலும், 6 சிறுமிகள் கோவை–சத்தி ரோடு அத்திபாளையம் பிரிவில் உள்ள மரியாலயா காப்பகத்திலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒருசில குழந்தைகளுக்கு பெற்றோர் உள்ளனர். ஒருசில குழந்தைகளுக்கு பெற்றோர் இல்லை. ஆனால் உறவினர்கள் உள்ளனர்.
எனவே இது குறித்து அந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக் கப்பட்டு உள்ளது. அந்த குழந்தைகள் அனைவரும் குழந்தைகள் பாதுகாப்பு குழு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர்கள் பெற்றோருடன் செல்ல விரும்பினால், பெற்றோருடன் அனுப்பி வைக்கப்படுவார்கள். இல்லை என்றால் காப்பகத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1,193 total views, 2 views today