கும்பகோணத்தில் இருந்து கட்டிட வேலைக்கு
சென்ற 30 பேர் கேரளாவில் தவிப்பு: தமிழகத்திற்கு அழைத்து வர கோரிக்கை

கும்பகோணத்திலிருந்து கட்டிட வேலைக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பாக கேரளாவிற்கு கட்டிட வேலைக்கு சென்ற 30 பேர், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் கொரோனாவால் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் 144 தடை உத்தரவு மிக தீவரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக – கேளரா எல்லைகள் முழுவதும் அடைக்கப்பட்டு, வாகனங்கள் தமிழகத்தின் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருவள்ளியக்குடி,பாலாக்குடி,மேலமராயம்,கீழ்வேளூர் புழுதிக்குடி சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள்,கேரளா மாநிலம் கண்ணுார்,கோழிகோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு, கட்டிட பணிக்காக சென்றனர். இவர்கள் ஒவ்வொரு வாரத்திற்கு, ஒவ்வொரு இடத்திற்கு சென்று வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது, கொரோனா பாதிப்பு அதிகளவில் இருக்கும்பட்சத்தில், நாடு முழுவதும் நேற்றுமுன்தினம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு திரும்ப முடியாமல், சாப்பாட்டிற்கு மிகவும் கஷ்டப்பட்ட, அங்குள்ள கட்டிடத்தில் தங்கியுள்ளனர்.
இது குறித்து திருநாவுக்கரசர் என்பவர் கூறியதாவது; நாங்கள் கேளரா மாநிலத்தில் கண்ணுார் நகர் பகுதியில், கட்டிடம் ஒன்று கட்டுவதற்காக, கடந்த 20 நாட்களுக்கு முன்பு சென்றோம். கடந்த 2 நாட்கள் முன்பு வரை வேலை செய்தோம். நேற்றுமுன்தினம் முதல் வேலை இல்லை. அதன்பிறகு கொரோனா எதிரொலியாக 144 தடை உத்தரவை தொடர்ந்து, ஊருக்கு திரும்ப முடியாமல் 20 பேர் தவித்து வருகிறோம். இதை போல, கோழிக்கோட்டில் 16 பேர் கும்பகோணத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஊரில் உறவினர், மனைவி எல்லாம் போன் செய்து நலம் விசாரித்து வருகிறார்கள். தற்போது இருக்கும் சம்பள பணத்தை வைத்து சாப்பிட்டு வருகிறோம். அதன் பிறகு எங்கள் நிலைமை மோசமாகி விடும். ஊருக்கு செல்ல கேளரா போலீசார் அனுமதி தர மறுக்கிறார்கள்.
இந்நிலையில், எங்களுக்கு கொரோனா அறிகுறி இருக்கிறது என சோதனை செய்து, தனிமையில் வைத்து கண்காணித்து பிறகு ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

195 total views, 6 views today