கழிப்பிடத்தில் கூடுதல் வசூல்: குத்தகைதாரர்களுக்கு அபராதம்

கோவை, : கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கட்டண கழிப்பிடங்கள் மற்றும் வாகன நிறுத்தும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூகஆர்வலர்கள் தரப்பில் புகார் செய்யப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி கமிஷனர் மற்றும் தனி அலுவலருமான விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், மத்தியமண்டல உதவி வருவாய் பிரிவு அலுவலர்கள் இருதினங்களுக்கு முன் உக்கடம் புதிய மீன்மார்க்கெட் வணிக வளாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடம், உக்கடம் பஸ்ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள கட்டண கழிப்பிடம் போன்றவற்றில் ஆய்வு நடத்தினர்
.
இதில் புதிய மீன் மார்க்கெட் வணிகவளாக இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் வணிகவளாகத்திற்குள் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்காமல், சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கும் கட்டணம் வசூலித்தது தெரிந்தது. இதையடுத்து குத்தகைதாரர் ஹரிகிருஷ்ணனுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், வசூலிக்கப்பட்ட வாகன கட்டணம் ரூ.1,160 பறிமுதல் செய்யப்பட்டு மத்தியமண்டல கருவூலத்தில் கட்டப்பட்டது. அதேபோல், உக்கடம் பஸ்ஸ்டாண்டில் ரூ.1க்கு பதிலாக ரூ.3 கட்டணமாக வசூலித்தது தெரிந்தது. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் ரஹமதுல்லாவுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல், காந்திபுரம் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நவீன கட்டண கழிப்பிடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிந்தது. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலித்த குத்தகைதாரர் வேலுசாமிக்கு ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரும், தனி அலுவலருமான விஜயகார்த்திகேயன் கூறுகையில்,‘ கூடுதல் கட்டணம் வசூலித்தால் மேற்கண்ட குத்தகைதாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேற்கண்ட குத்தகைதாரர்கள் தொடர்ந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்காமல் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அவர்களின் குத்தகை உரிமம் ரத்து செய்யப்படும்,’ என்றனர்.

410 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close