இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் எம்எல்ஏ.,வுமான .முஹம்மத் அபூபக்கரை முறை தவறிப் பேசியதாக திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், இன்று (28 ம் தேதி) மாலை மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்புக் குழு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு ஏற்பட்டதையடுத்து, நடந்தது என்ன என்பதை விளக்கும் பொதுக்கூட்டமாக நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு காயல்பட்டினம் மஸ்ஜித் மீக்காஈல் பள்ளிவாசலின் தலைவரும் – காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை துணைத்தலைவருமான எம்.கே.முஹ்யித்தீன் தம்பி துரை தலைமை தாங்கினார். இந்திய தேசிய காங்கிரஸ் பிரமுகர் ஜமால் மாமா, காயல்பட்டினம் அனைத்து சமுதாயக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சாளை ஸலீம், திமுக காயல்பட்டினம் நகர செயலாளர் முத்து முஹம்மத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அழகு முத்து பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. பேசும் போது,

திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ் தொலைபேசியில் என்னை தொடர்புகொண்டு பேசினார். உங்களிடம் நான் உதிர்த்த சொற்களுக்கு என் மனதில் எந்த உள்நோக்கமும் இல்லை.கொரோனா தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகளில் இடைவெளியின்றி இயங்கிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், உங்களுடனான எனது உரையாடலைப் பெரிதுபடுத்தாமல், அரசுத் துறையில் பணியாற்றும் நாங்களும், அரசின் மக்கள் பிரதிநிதிகளான நீங்களும் சுமுகமாகப் பணியாற்றி, மக்களுக்குச் சேவை செய்வோம் என்று கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையில், இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அதற்கு முழு ஆதரவளித்த நகரின் அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள், அனைத்து ஜமாஅத்துகள், புறநகர் ஊர் நலக் கமிட்டியினருக்கும், பிரச்சனையைக் கேள்வியுற்றதும் என்னை செல்போனில் வழியே தொடர்புகொண்டு ஆறுதல் கூறிய தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட எஸ்பி, திருச்செந்தூர் துணை கண்காணிப்பாளர், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இந்த சமாதான விளக்க கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் .இப்றாஹீம் மக்கீ, அதன் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் .மஹ்மூதுல் ஹஸன், நகர தலைவர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன், நகர செயலாளர் அபூஸாலிஹ், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், காயல்பட்டினம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள், பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள், பிரதிநிதிகள் ஆகியோருடன், நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து திரளாகக் கலந்து கொண்டனர்.

 40 total views,  2 views today