உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உதவித்திட்டம்.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உதவித்திட்டம்.

June 5, 2017 0 By BAHRULLA SHA

திசைவழி பகுதி – 5

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களது குடும்பத்தினர் சமூக, பொருளாதார, கல்வி ஆகியவற்றில் விழிப்புணர்வு பெற்று முன்னேற்றம் அடைவதற்காக வேண்டி கடந்த 2009-ஆம் ஆண்டு
“உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம்’’ தமிழக அரசால் துவங்கப்பட்டது.

இவ்வாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள் :- 18 வயது முதல் 60 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல்.
அ) பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் பேஷ் இமாம்கள், மோதினார்கள், அரபி ஆசிரியர்கள்/ ஆசிரியைகள் மற்றும் பிற பணியாளர்கள்.
ஆ) தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷீர்கானாக்கள், மற்றும் அனாதை இல்லங்களில் பணி செய்யும் பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு தகுதி உடையவர்கள் ஆவர்.

உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்கும் முறை:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து விண்ணப்பப் படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து குறிப்பிடப்பட்ட ஆவணங்களை இணைத்து அவரிடமே சமர்ப்பிக்க வேண்டும்.

உறுப்பினர் படிவத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்:-
அ) 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்
ஆ) பணியாற்றும் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பணிச்சான்றிதழ்
இ) வயதுச் சான்றிதழ் (பிற ஆவணங்கள் இல்லையெனில் மருத்துவரிடமிருந்து வயதுச் சான்றிதழை பெறலாம்)

உறுப்பினர்களுக்கான சலுகைகள் விபரம்:-
அ) பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு அவர்கள் கற்கும் வகுப்பிற்கு தகுந்தவாறு ரூ 1,000/- ம் முதல் ரூ 6,000/-ம் வரை ஆண்டு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகின்றது. தற்போது ரூ.2000 அதிகப்படுத்தி வழங்கப்படுகிறது. மொத்தத்தொகை ரூ.8000 ம் வரையிலும்.
ஆ) மகள் / மகன் (படித்திருக்காவிடினும்) திருமணச் செலவிற்கு திருமண உதவித் தொகையாக ரூ. 2,000/-ம் வழங்கப்படுகின்றது.
இ) பெண் உறுப்பினர்களுக்கு மகப்பேறு கால உதவித் தொகை ரூ 6,000/- ம் மற்றும் கருக்கலைப்பு / கருச்சிதைவு ஏற்படின் உதவித் தொகை ரூ 3,000/-ம் வழங்கப்படுகின்றது.
ஈ) கண் கண்ணாடி வாங்கினால் அதற்கான செலவை ஈடு கட்டுவதற்காக ரூ.500/- ஒருமுறை மட்டும் வழங்கப்படும். இதற்கு கண் பரிசோதனை செய்த மருத்துவ சீட்டையும், கண்ணாடி வாங்கியதற்கான ரசீதையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
உ) குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி செய்து 60 வயது பூர்த்தி அடைந்தோருக்கு மாதம் ரூ.1000/- ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
உ) ஈமச்சடங்கிற்காக,உறுப்பினர் வாரிசாக நியமித்தவருக்கு இறுதிச்சடங்கு செலவிற்கு ரூ.2,000/-ம் வழங்கப்படுகின்றது.
எ) உறுப்பினர் இயற்கை மரணம் எய்தால் அவர் வாரிசாக நியமித்தவரிடம் ரூ.15,000/-ம் நிவாரணத் தொகை வழங்கப்படுகின்றது.
ஏ) உறுப்பினர் விபத்தால் இறப்பின் ரூ.1 லட்சம் மற்றும் உடல் உறுப்புகளை இழப்பின் (இழப்பிற்குத் தகுந்தவாறு) ரூ 25,000/-ம் முதல் ரூ.1 லட்சம் வரை நிவாரணத் தொகை வழங்கப்படுகின்றது.
நலத்திட்ட உதவிகளைப் பெற உரிய படிவத்தை பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் அவர் பணிபுரியும் அமைப்பின் நிர்வாகியிடம் “உண்மைச் சான்றிதழ்” கையொப்பம் பெற்று மாவட்ட பி.ப. மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் அவரது பதிவை புதுப்பிக்க வேண்டும் உறுப்பினர் பதிவை புதுப்பிக்க கட்டணம் ஏதும் கிடையாது.

குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவிக்க வேண்டிய அலுவலர்  மாவட்டங்களில்   மாவட்ட ஆட்சியர் /  மாநில அளவில் முதன்மை செயல் அலுவலர், தமிழ்நாடு வக்பு வாரியம், எண்.1. ஜாபர் சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை – 600 001.

ஏ.அக்பர் சுல்தான், அலுவலக செயலாளர்,
‘’விழி’’ – தமுமுக மனிதவள மேம்பாட்டு துறை,

5,334 total views, 4 views today