உடன்குடி திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டணம் வழியாக திசையன்விளைக்கு ஆங்கிலேயர் காலத்தில் தினசரி மூன்று முறை இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

உடன்குடி திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டணம் வழியாக திசையன்விளைக்கு ஆங்கிலேயர் காலத்தில் தினசரி மூன்று முறை இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வளம் நிறைந்த குலசேகரபட்டணம்:

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா உடன்குடி பஞ்., யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன்பட்டணம் ஒரு அழகான கடற்கரை கிராமம், முந்தைய காலத்தில் இவ்வூரை குலசேகரபாண்டியன் என்ற மன்னன் ஆண்டு வந்ததால், அம்மன்னனின் பெயரால் குலசேகரபட்டணம் என அழைக்கப்படுகிறது. மன்னர்கள் காலம் தொட்டு குலசை கடற்கரை இயற்கை துறைமுகமாக விளங்குவருகிறது. அருகில் உள்ள இலங்கை மற்றும் சுற்றியுள்ள நாடுகளுக்கு இங்கு விளையும் நெல், பயிர் வகைகள், கருப்புகட்டி, தேங்காய், உப்பு போன்ற விளைப்பொருட்கள் மற்றும் குதிரைகள் கூட இறக்குமதி செய்துள்ளனர்.

குலசையில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் ரூட்

மேலும் குலசை உடன்குடி பகுதியில் இயற்கை வளம் மிகுந்து இருந்ததாலும் பனைத்தொழில் சிறந்து விளங்கியதாலும் குலசையில் பதனீரில் இருந்து சீனி தயாரிக்கும் ஆலையை ஆங்கிலேயர்கள் அமைத்தனர். இதற்கு கே.பி.எம் ஆலை எனவும், குலசை துறைமுகத்திற்கு கே.பி.எம் போர்ட் எனவும் பெயர் வைத்திருந்தனர்.

இப்பகுதி மக்களுக்கு போக்குவரத்திற்காக குலசேகரன்பட்டணத்தை தலைமையிடமாக கொண்டு இரயில் இயக்கப்பட்டுள்ளது. திசையன்விளையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் ரயில் இடைச்சிவிளை, தட்டார்மடம், சொக்குன்குடியிருப்பு, படுக்கப்பத்து, பிச்சிவிளை வழியாக குலசேகரன்பட்டணம் சென்ரல் ஸ்டேசன், கே.பி.எம் போர்ட், கே.பி.எம் பாக்டரி, ஆலந்தலை வழியாக திருச்செந்தூருக்கு காலை 9 மணிக்கு சென்றுள்ளது. சுமார் 3 மணி நேரம் ஆகியுள்ளது. இதற்கு கட்டணமாக அப்போது 13 அணாவும், 8 பைசாவும் வசூலித்துள்ளனர்.

தினசரி மூன்று முறை இந்த ரயில் இயக்கப்பட்டுள்ளது. இது போன்று திசையன்விளையில் நடைபெறும் வெள்ளிக்கிழமை சந்தைக்கு குலசை கே.பி.எம் பேக்டரியில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டுள்ளது. மேலும் குலசேகரன்பட்டணம் சென்ட்ரல் ஸ்டேசனில் இருந்து கொட்டாங்காடு வழியாக உடன்குடிக்கு மூன்று முறையும் ரயில் இயக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் விளைந்த பொருட்களை குலசேகரன்பட்டணம் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனை செய்தது மட்டுமில்லாமல் வெளியிடங்களுக்கு ஏற்றுமதியும் செய்துள்ளனர்.
ரயில்தடம் இருக்கிறது

கோரிக்கை மட்டும் கிடப்பில் கிடக்கிறது

இன்னும் குலசையில் துறைமுகத்தில் இருந்து பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கும், இறக்குமதி செய்வதற்கும் உள்ள பண்டகசாலை உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடந்த சுதந்திர போராட்டத்தின் போது இப்பகுதி மக்கள் கடுமையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதனால் குலசை உப்பளத்தில் வைத்து ஆங்கிலே அதிகாரி லோன்துரை கொல்லப்பட்டார். அவரது கல்லறையும் குலசையில்தான் உள்ளது. இதனால் சீனி ஆலை மற்றும் ரயில் சேவையும் ஆங்கிலேயர்கள் நிறுத்திவிட்டனர். பின்னர் வந்த இந்திய அரசும் சீனி ஆலையும், ரயில் சேவையும் தொடர்ந்து நடத்தாமல் விட்டுவிட்டனர். தற்போது சீனி ஆலை இருந்த இடம் மட்டுமே உள்ளது. ஆனால் ரயில் ஓடிய ரயில்வே தடங்களை ஆக்கிரமித்துவிட்டனர். இது குறித்து பல முறை இப்பகுதி மக்கள் ரயில்வே துறையிடம் மனு கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வரலாற்று உண்மை மறைக்கப்பட்டுள்ளது;

இது குறித்து உடன்குடி பஞ்., யூனியன் கவுன்சிலர் பிரபாகர் முருகராஜ் கூறுகையில் முற்றிலும் ஒரு வரலாறு உண்மை மறைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மிக சிறப்பாக தொழில் நடந்துள்ளது. மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கவேண்டிய குலசேகரன்பட்டணம் அப்போது இருந்த அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் தன்னுடைய பெருமைகளை இழந்து காணப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றவுடன் தியாகிகள் நிறைந்து காணப்படும் இப்பகுதிகளில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தி மீண்டும் சீனி ஆலையை துவங்க நடவடிக்கை எடுத்திருக்கலாம். இது போன்று திசையன்விளை-திருச்செந்தூர் ரயில் சேவையும், உடன்குடி – குலசேகரன்பட்டணம் ரயில் சேவையும் தொடர்ந்து இயக்கி இருந்தால் திசையன்விளை, உடன்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால் மிகப்பெரிய வரலாற்றை அதிகாரிகள் மறைத்துவிட்டனர். இனியாவது மத்திய அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டணம், உடன்குடி, கொட்டங்காடு, பிச்சிவிளை, தட்டார்மடம், இடைச்சிவிளை, திசையன்விளை, நாங்குநேரி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி வரை ரயில் இயக்க நடவடிக்கை எடுத்தால் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் இப்பகுதி மக்களுக்கு ஓரளவு நன்மை ஏற்படும்.

மேலும் பிரசித்திப்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி, குலசேகரன்பட்டணம் முத்தராம்மன், செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி, தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் ஆகிய கோயில்களுக்கு தென்பகுதியில் இருந்து வரும் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். மேலும் விவசாயம் முற்றிலும் அழிந்து விட்டதால் சீனி ஆலையை மீண்டும துவங்கினால் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படும். எனவே தற்போதுள்ள அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

 

திருச்செந்தூர் செய்தியாளர் சுரேஷ்

174 total views, 6 views today

Top

Registration

Forgotten Password?

Close