இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது திண்டுக்கல் டிராகன்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018ஆம் ஆண்டு தொடரின், முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் திண்டுக்கல் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
சங்கர் சிமெண்ட் தமிழ்நாடு பிரீமியர் லீக் 2018ஆம் ஆண்டு தொடரின், முதல் தகுதிச்சுற்றுப் போட்டி, திண்டுக்கல், நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் மாலை 03.15 மணி நடைபெற்றது. இதில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
ஆட்டம் தொடங்குவதற்கு முன்னாதாக மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர். கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு இரங்கல் செலுத்தும் விதமாக இரு அணி வீரர்களும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

திண்டுக்கல் அணியில் ஹரி நிஷாந்த் மற்றும் என்.ஜெகதீசன் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹரி நிஷாந்த் முதல் ஓவரிலேயே 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை விளாசினார். தொடர்ந்து திண்டுக்கல் அணியினர் அதிரடியாகவே ஆடினார்கள். இதனால், பவர்பிளே ஓவர்களில் 67 ரன்கள் எடுத்தனர்.

சிறப்பாக ஆடிய ஹரி நிஷாந்த் 27 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். பின்னர், ஆட்டத்தின் 9.1ஆவது ஓவரில் ஹரி நிஷாந்த் 31 பந்துகளில் [4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] 57 ரன்கள் குவித்து வெளியேறினார். பின்னர், திண்டுக்கல் அணி 10 ஓவர்களில் 100 ரன்கள் குவித்தது. கேப்டன் ஜெகதீசன் 34 பந்துகளில் [6 பவுண்டரி, ஒரு சிக்ஸர்] 43 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் களமிறங்கிய ஆர்.விவேக் மளமளவென சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசினார். இதனால், 23 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். பின்னர் 25 பந்துகளில் [2 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்] 54 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அதன் பின்னர் எம்.மொஹமது 7 ரன்களிலும், என்.எஸ்.சதுர்வேத் ரன் ஏதும் இல்லாமலும் வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. இந்த தொடரில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ரன் இதுவாகும். மதுரை அணி தரப்பில் ஜெகன்நாத் சீனிவாஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர், 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மதுரை அணியில் தொடக்க ஆட்டக்காரர் முதல் பந்தை சிக்ஸருக்கு தூக்கி அதிரடியாக தொடங்கினாலும், 2ஆவது ஓவரிலேயே 4 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மேலும், ஆடத்தின் 4ஆவது ஓவரில் கேப்டன் டி.ரோஹித் 10 ரன்களிலும், தலைவன் சற்குணம் 8 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். அதன் பின்னரும், மதுரை அணியில் யாரும் பெரியளவில் ரன் குவிக்க தவறியதால் பின்னடைவுக்கு உள்ளாகினர்.
தொடர்ந்து ஷிஜித் சந்திரன் 18 ரன்களிலும், ஆர்.கார்த்திகேயன் 19 ரன்களிலும், ஜெ.கௌசிக் 7 ரன்களிலும், நிலேஷ் சுப்பிரமணியன் 3 ரன்களிலும் வெளியேற 12.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே கொடுத்தது.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் அபிஷேக் தன்வார் இணை மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு ஆடியது. ஓரளவு நிலைத்து நின்ற ஆடிய அபிஷேக் தன்வார் 17.3ஆவது ஓவரில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதுதான் மதுரை அணியில் அடிக்கப்பட்ட அதிகப்பட்ச ஸ்கோர் ஆகும்.

இறுதியாக சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி 19.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்கள் எடுத்தது .இதன் மூலம் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. திண்டுக்கல் அணி தரப்பில் அதிகப்பட்சமாக எம்.மொஹம்மது 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
விருதுகள்:
சங்கர் சிமெண்ட் வழங்கும் ஆட்ட நாயகன் விருது மற்றும் காசோலை ஆர்.விவேக் [திண்டுக்கல் டிராகன்ஸ்] அவர்களுக்கு வழங்கப்பட்டது.
நத்தம் செய்தியாளர் ஜனகர்

234 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close