இந்தியாவில் மட்டும்தான் மனிதன் பிறக்கும் முன்பே தண்டிக்கப் படுகிறான். சட்டக்கலூரி மாணவர் மாநாட்டில் வழக்கறிஞர் ப.பா.மோகன்.

அனைத்திய மாணவர் பெருமன்றத்தின் சட்டக்கல்லூரி கிளையின் இரண்டாவது மாநாடு இன்று ( 13.02.2018 ) காலை கோவை, மருதமலையில் உள்ள, செங்குந்தர் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன் பேசும்போது, “ இந்தியாவில் மட்டும்தான் மனிதன் பிறக்கும் முன்பே தண்டிக்கப் படுகிறான். உலகில் எங்கும் இல்லாத சாதி முறை இந்தியாவில் இருக்கிறது. நமது அரசியல் சட்டம் சொல்கிறது. சட்டத்திற்கு முன்னாள் அனைவரும் சமம். யாரையும் குற்றம் செய்வதற்கு முன்னாள் தண்டிக்க முடியாது என்கிறது.

ஆனால் நமது சாதி முறை ஒருவன் தாழ்ந்த சாதியில் பிறந்து விட்ட காரணத்தினாலே அவனுக்கு உரிமைகளை மறுக்கப்படுகிறது. எனவேதான் காந்தி – அம்பேத்கார் கடிதப் போக்குவரத்து நடைத்திக் கொண்டு இருக்கும்போது, ஒருமுறை காந்தியிடம் நீங்கள் இருநூறு ஆண்டுகள் இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நான் இரண்டாயிரம் ஆண்டுகள் நம்மக்களை அடிமை படுத்தி வைத்து இருப்பவர்களை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறேன் என்றார்.

நாம் நம்மை வாழவைக்கும் பூமிப் பந்தை நாசம் செய்துகொண்டு இருக்கிறோம். எதிர்காலத்தில் தண்ணீருக்காக யுத்தங்களை சந்திக்க வேண்டி வரும். நாம் வாழும் காலத்திலேயே தூய்மையாக ஓடிக்கொண்டு இருந்த காவிரி அசுத்தமாகிவிட்டது. கோவையை வளமாக்கி ஓடிக்கொண்டிருந்த நொய்யல் செத்த நதியாகிவிட்டது. இத்தனைக்கு பின்னரும் இந்தியாவில் பாக்சைட்டை எடுக்கவும், யுரேனியத்தை எடுக்கவும், மீத்தேனை எடுக்கவும் அந்நியர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். ஹாதியா வழக்கில் உச்சநீதி மன்றமே நீதியை பார்க்க மாறுகிறது.

சட்டம் சட்டத்திற்கு முன்னாள் அனைவரும் சமமென்று சொன்னாலும் சமமின்மை நிலவுகிறது. எனவே, சமம்மற்ற மக்கள் சமூகத்தை சமமாக்கும் போராட்டத்தில் மாணவர்கள் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டும்.” என்றும் அவர் கூறினார்.
இந்த மாநாட்டிற்கு சட்டக்கல்லூரி மாணவி சங்கீதா தலைமை தாங்கினார். இதில் இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் மாநில பொது செயலாளர் வழக்கறிஞர் எஸ்.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் கே.சுப்பரமணியம், அனைத்திதிய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.பி.சக்திவேல், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் எம்.குணசேகர், நா.பாலசுப்பரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சட்டக்கல்லூரி கிளையின் தலைவராக தயாளனும், செயலாளராக சங்கீதாவும், பொருளாளராக காளிதாசும், துணைத் தலைவராக லதாவும், துணைச் செயலாளராக ரேணுகாவும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கவேண்டும், தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் துவங்க அனுமதிக்கூடாது, பார்கவுன்சிலில் புதிதாக பதிவு செய்ய காத்திருக்கும் மாணவர்களுக்கு மூன்றாண்டுகள் வரை மாதம் 3000 ரூபாய் உதவித் தொகை வழங்கவேண்டும். சட்டக்கலூரி வளாகத்தில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப் படுகிறது. இந்தபோக்கை சட்டக்கலூரி கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

3,968 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close