செங்கோட்டை அருகே அபாயகாரமான நிலையில் உள்ள மண்பாண்ட கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன் பொத்தை கிராமத்தில் செயல்பட்டுவரும்
(பதிவு எண் 01176 ) மண்பாண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் கடந்த 1947ம் ஆண்டில் இருந்து இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் இந்த சங்கத்தின் மூலம் மண்பாண்ட பொருட்களான பானை உள்ளிட்ட சுமார் 15க்கும் மேற்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து அண்டை மாநிலமான கேரளா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சங்க கட்டடத்தின் அருகே உள்ள தொழிலாளர்கள் வேலை செய்யும் கட்டடம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. கட்டடத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதிலமடைந்தும், மேற்கூரையை தாங்கி நிற்கும் மரகம்புகள் கரையான் அரித்தும், சேதமடைந்த கம்புகள் கீழே விழாமல் இருக்க முட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல் விஷ ஜந்துக்கள் நடமாட்டமும் அதிகமாக உள்ளதால் எப்போதும் பெரும் அச்சத்துடனே வேலை செய்து வருவதாக தொழிலாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த இடத்தை நெல்லை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு புதிய கட்டடம் கட்ட சுமார் ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த கட்டத்தினை அகற்றி புதிய கட்டடம் கட்டி மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிட வழிவகை செய்யவேண்டும் என இப்பகுதி மண்பாண்ட தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 364 total views

1 COMMENT