ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்பிணிப் பெண்களுக்கு போதிய படுக்கை வசதி இல்லாமல் வெட்டவெளியில் தங்கவைத்து பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படும் நிலையில், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மாவட்ட தலைமை மருத்துவமனையான இம்மருத்துவமனைக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கில் கர்பிணிப் பெண்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். வெளியூரைச் சேர்ந்த, பிரசவ தேதி அறிவிக்கப்பட்ட பெண்கள் ஒரு சில தினங்களுக்கு முன்பாகவே மருத்துவமனைக்கு வந்துவிடுகின்றனர்.
அவ்வாறு வருபவர்களில் பலருக்கு படுக்கை வசதிகள் கிடைக்காமல் மரத்தடியிலோ, மருத்துவமனை வராண்டாவிலோ காத்திருந்து, மருத்துவர் வரும்போது ஓடிச்சென்று பரிசோதனையோ, சிகிச்சையோ எடுத்துக் கொள்ளும் அவல நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது.காற்றோட்டம் இல்லாமல், போதிய ஊட்டச்சத்து உணவையும் உட்கொள்ள முடியாமல் பரிதாப நிலையில் ஆங்காங்கே கர்பிணிகளை காண முடிகிறது.
மருத்துவமனை வளாகத்திலேயே ஓராண்டுக்கு முன் பல லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன கட்டிடம் உள்ளது. உள்ளே அறுவை சிகிச்சை அரங்கமும் அதில் பல கோடி ரூபாய் மதிப்பில் வாங்கப்பட்ட புத்தம்புதிய நவீன கருவிகளும் உள்ளன. இந்தக் கட்டிடம் கடந்த ஓராண்டாக பூட்டியே கிடக்கும் நிலையில், அதனை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தால் நெருக்கடிகளை குறைக்க முடியும் என்கின்றனர் பொதுமக்கள்.
பொதுமக்களின் இந்தக் கோரிக்கை மீது மருத்துவ இணை இயக்குநர் சகாயம் ஸ்டீபன் ராஜிடம் கேட்டபோது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். மாவட்ட ஆட்சியர் வீரராகவராவிடம் கேட்டபோது, பொதுமக்கள் கூறும் குறைகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினார்.
பல கோடி ரூபாய் செலவு செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவத்தை அளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதனை மக்கள் பயன்பாட்டுக்கு முறையாக கொண்டுசெல்ல வேண்டியது அதிகாரிகளின் கடமையாகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் பூட்டிக்கிடக்கும் புதிய கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 657 total views