அரசு ஆஸ்பத்திரியில் அனாதையாக விட்டுச்சென்ற பெண் குழந்தை சாவு – போலி முகவரி கொடுத்த பெண் யார்?

September 11, 2015 0 By admin
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 9–ந் தேதி இரவு 9.50 மணிக்கு பிறந்து சில மணி நேரமே ஆன கைக்குழந்தையுடன் ஒரு பெண் வந்தார்.
அவர் அங்கிருந்த டாக்டர் மற்றும் நர்சுகளிடம் எனது பெயர் கவிதா. சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சுகப்பிரசவத்தில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் கூறினார்கள். எனவே இங்கு வந்தேன் என்றார்.
அதைத்தொடர்ந்து அந்த பெண்ணை குழந்தைகள் சிகிச்சை பெறும் வார்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை அனுமதித்தனர். கவிதாவும் அதே வார்டில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் 10–ந் தேதி காலை கவிதா திடீரென்று மாயமானாள். கழிவறைக்கு சென்றிருப்பார் என நினைத்தனர். வெகு நேரமாகியும் கவிதா வரவில்லை. ஆஸ்பத்திரி முழுவதும் தேடியும் பலன் இல்லை. எனவே அங்குள்ள புறக்காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிங்காநல்லூர் போலீசை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் விசாரித்த போது தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கவிதாவின் குழந்தை நேற்று இரவு பரிதாபமாக இறந்தது. கவிதா ஆஸ்பத்திரியில் சேரும் போது முகவரி கொடுத்திருந்தார். அது போலி என தெரிய வந்துள்ளது.
மேலும் அவர் கொடுத்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
ஆஸ்பத்திரியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமிராவில் அந்த பெண்ணின் உருவம் பதிவாகி உள்ளது. அதன் மூலம் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.

5,523 total views, 2 views today