அயோத்தி வழக்கின் இறுதி விசாரணையை, இன்று மாலை 5 மணிக்கு முடிக்குமாறு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டிருக்கிறார்.

இந்து மகா சாபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இதுவரை தாக்கல் செய்ய மனுக்களே போதும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2 புள்ளி 77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோகி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

அயோத்தி வழக்கில் கடந்த 2010ஆம் ஆண்டு தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பங்கிட்டு பிரித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட14 மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி முதல், நீதிமன்றத்தின் அனைத்து பணி நாட்களிலும் இடைநிற்றலின்றி விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 39 நாட்களாக உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்று, 40ஆவது நாளாக இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில், 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன், இந்து மகா சபா சார்பில், வழக்கில் தலையிட அனுமதி கோரி, இன்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை உடனடியாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இதுவரை தாக்கல் செய்யப்பட்ட முறையீட்டு மனுக்களே போதுமானது என்றார். மேலும், அயோத்தி வழக்கின் இறுதி விசாரணையை, இன்று மாலை 5 மணிக்குள் முடிக்கவும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் 17ஆம் தேதி ஓய்வு பெறுவதால், அன்றைய தினத்திற்குள், அயோத்தி வழக்கில், அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

375 total views, 3 views today