அமீரக தமிழர் பேரவை நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

அமீரக தமிழர் பேரவை நடத்திய இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

இவ்வருட ரமழான் ஆறாவது நோன்பு தினம் – 22.05.2018 செவ்வாய்க்கிழமை அன்று மாலை, துபை அப்ஜத் கிராண்ட் ஹோட்டல் விருந்தினர் கூடத்தில், அமீரகத்தில் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் ஈடுபட்டுவரும் அமீரக தமிழர் பேரவையின் சார்பாக தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, மே 17 இயக்கம், நாம் தமிழர் கட்சி, இளந்தமிழகம் உள்ளிட்ட அமைப்புகளின் அமீரக நிர்வாகிகள் மற்றும் முற்போக்கு தமிழ் எழுத்தாளர்கள், பல்வேறு மாவட்டங்களின் ஊர் ஜமாஅத் அமைப்புகளின் நிர்வாகிகள், கிருத்துவ அமைப்புகளின் பிரதிநிதிகள், ஊடகத்துறை வல்லுனர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள், பல்வேறு நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் சங்கமித்து மகிழ்ந்து சிறப்பித்தனர்.

அமீரக தமிழர் பேரவையின் தலைவர் ஃபக்ருதீன் அஹ்மது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பேரவையின் ஷார்ஜா மண்டல தலைவர் நிலாமுதீன் அவர்கள் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்கள்.

தொடர்ந்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான மக்கள் போராட்டத்தில் அரச பயங்கரவாத துப்பாக்கிச்சூட்டில் பலியான தமிழ் சொந்தங்களுக்கு ஒரு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், பேரவை அமீரகத்தில் முன்னெடுத்து வரும் மக்கள் நலப்பணிகள் குறித்து துணைத்தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் அறிமுக உரையாற்றினார்.

நிகழ்ச்சிக்கு வருகைதந்திருந்த அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.  அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அமீரக தமிழர் பேரவையை அனைவரும் வெகுவாக பாராட்டியதோடு, இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற தத்தமது ஆவலையும் வெளிப்படுத்தினர்.

அதனைத்தொடர்ந்து அனைவருக்கும் இஃப்தார் உணவு பரிமாறப்பட்டது.  உணவு மற்றும் தொழுகை இடைவேளைக்குப் பின், பேரவையின் சிறப்புப் பேச்சாளர் வலசை ஃபைஸல் அவர்கள் “இந்தியாவின் தற்போதைய அரசியல் சூழ்நிலையும், நாம் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டிய அவசியமும்” என்ற தலைப்பில் வீரியமிக்க சொற்பொழிவு நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியை, பேரவையின் தேரா-துபை கிளைத்தலைவர் ரியாஸ் அவர்கள் நேர்த்தியாக தொகுத்து வழங்கினார்கள்.

பேரவையின் அழைப்பினை ஏற்று வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்த அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் பொதுச்செயலாளர் முஹம்மது சியாத் அவர்கள் நன்றி கூற, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

2,530 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close