அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கருத்து!

0
0

அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் கருத்து

இன்று தமிழக அரசு சார்பில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மற்ற கட்சியினர் தங்களின் கருத்துகள், தங்களின் ஆதரவு குறித்து தெரிவித்தனர்.

ஓ.பன்னீர் செல்வம், தமிழக துணை முதல்வர் : 

கூட்டம் துவங்கியதும் முதலில் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்திற்கு வந்துள்ள அனைவரையும் வரவேற்று, பிறகு பேசத்துவங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள 177.25 டிஎம்சி தண்ணீர் அளவு வருத்தமளிப்பதாக இருந்தாலும் அதை முறையாக தமிழக மக்களுக்கு வழங்க, என்ன நடவடிக்கை செய்ய வேண்டும் என்பதில் சட்ட வல்லுநர்களுடன் இணைந்தும் அனைத்து கட்சிகளின் கருத்தை ஏற்று தமிழக அரசு செயல்படும் என கூறினார்.

மு.க ஸ்டாலின், திமுக செயல் தலைவர் : 

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் அனைத்து முயற்சிகளுக்கும் திமுக துணை நிற்கும் என்றும்  உச்சநீதிமன்றத்தால் குறைக்கப்பட்ட நீரின் அளவை திரும்ப பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன், தமிழக பாஜக தலைவர் : 

காவிரி வழக்கில் தமிழக அரசின் உரிமையை நிலைநாட்ட பாஜக துணை நிற்கும் என்றும், அடுத்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

திருநாவுக்கரசர், தமிழக காங்கிரஸ் தலைவர் : 

டெல்டா பகுதிகளை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்தார் மேலும், தமிழக நிலத்தடி நீரைப் பற்றிய சரியான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டதா?  என்றும் கேள்வி எழுப்பினார். சரியான வாதங்கள் வைக்கப்பட்டதால் தான் நல்ல தீர்ப்பு வந்துள்ளதாக துணை முதலமைச்சர் பதிலளித்தார்.

முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் : 

சென்னை வரும் பிரதமரை, அனைத்துக்கட்சி தலைவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் தர வேண்டும்.

கருணாஸ் : 

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் , அதற்கு தமிழக அரசு , மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இந்த கூட்டம் ஒரு சம்பிரதாய கூட்டமாக இருக்கக் கூடாது அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும் , விவசாய சங்கம் தலைவர்களுக்கும் தங்களின் கருத்துகளை பேச  வாய்ப்பு அளிக்கப்பட்டதாக கூறினார்.

இறுதி உறையாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி : 

காவிரி நதிநீர் போன்ற மிக  முக்கியமான பிரச்சனையிலும், அதன் மீது பல்வேறு கருத்து வேறுபாடுகள்  இருந்தாலும் தமிழ்நாடு மக்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து கட்சியினரும் ஓரணியில் திரண்டு தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட பாடுபட வேண்டும் என கூறினார். மேலும், அனைவரின் கருத்துகளை சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து நல்ல முடிவெடுக்கபடும் என உறுதியளித்தார்.

சென்னை செய்தியாளர்
கண்ணியப்பன் A N

1,827 total views, 6 views today